கோயில் மூலஸ்தானத்தில் இருக்கக்கூடிய விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல் கருங்கல்லால் மட்டும் செய்கிறார்கள்.ஒரு சில கோயில்களில் சுதை, மரத்தால் செய்யப்படுவது என்பது விதிவிலக்காக நமக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.
உலோகத்தின் ஆற்றலை விட கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானதாம். எந்த சக்தியையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளக்கூடிய தன்மை உடையது கல் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதில், நீர், நிலம், நெருப்பு,காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களினுடைய தன்மை விசேஷமாக அடங்கி இருந்து வெளிப்படுவது போல் வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை என்றும் சொல் கிறார்கள்.
கல்லில் நீர் இருக்கிறது. எனவேதான் இயல்பான குளிர்ந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறது. உதாரணமாக, கல்லினுள் நீரூற்று இருப்பதை நாம் அறிய முடியும்.
பஞ்சபூதத்தில் நிலம் என்கிற பூதமும் கல்லில் இருக்கிறது. எனவே தான் கல்லில் செடி, மரம் எல்லாம் வளர்கிறது.
கல்லில் நெருப்பு இருக்கிறது. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறது.
கல்லில் காற்று இருக்கிறது. எனவே தான் கல்லில் தேரை கூட வசிக்கிறது.
ஆகாயத்தை போல வெளியில் இருக்கக்கூடிய சத்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சத்தி கல்லுக்கு இருக்கிறது.
எனவே தான் கருங்கல்லால் கட்டப்பட்ட சில கோயில்களில் நாம் சொல்வது எதிரொலிக்கும்.
இப்படிப்பட்ட காரணங்களினால் தான் ஐம்பூத வடிவில் இருக்கக்கூடிய அந்தப் பேராற்றலை, இறைவனை ஐம்பூதப் பொருளான கல்லிலே வீற்றிருக்கும் படி அமைத்து வழிபாடு செய்யப்படுகிறது என்பதனை உணர்வோம்.. உன்னத வழிபாட்டினை எந்நாளும் செய்வோம்.
Article By – என். செல்வராஜ், கோவை