பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வட மொழியில் “ஷோடச உபசாரா” என்று சொல்வார்கள்.
பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு இறைவன் விக்கிரகத்தின் முன் திரைபோட்டு இருப்பார்கள். அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது.
’நான்’ என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது.
அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும்.
அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை.
இறைவனை மிகத் தெளிவாக அறிய “ஞானம்” என்ற விளக்கு வேண்டும். அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி.
நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர் ஞானத்தின் துணையுடன் இறைவனைக் காண முடியும் என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.
திரை விலகுதல், தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல் எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல் எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும் என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.
கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது. கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது.
கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது. இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது. ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன.
ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான். இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.
தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம்.’இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும். என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்.’ என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது.
எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு இறைவனை வணங்கி அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல் முன்னோர்கள் சொன்ன தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்க வேண்டும். அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை. அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர முடியும் என்கிறார்கள்.
உண்மையான வழிபாட்டின் பலனை அடைய முடியும் என்றும் சொல்லியிருக்கிறார் கள்.
Article By – என். செல்வராஜ், கோவை.



 
							 
							 
							 
							 
							 
							 
							 
							