திருமாலின் திரு அவதாரங்கள் ஒவ்வொன்றுமே மிகுந்த பெருமை வாய்ந்தவை. என்றாலும், கிருஷ்ணருக்கு மிகவும் சிறப்பு உண்டு என்று சொல்வார்கள். காரணம், தன்னை கடவுள் என்றே அறிவித்து அவர் அவதாரம் எடுத்தார் என்றும்,
அதேபோல தன்னை நம்பியவர்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார் என்றும், எந்த யுகத்தில் எப்போது தர்மம் அழிகிறதோ அப்போது தானே அவதாரம் செய்வதாக வாக்கு கொடுத்தார் என்றும் சொல்வார்கள்.
அப்படிப்பட்ட கிருஷ்ணர்க்குரிய அவருடைய அவதார தினத்தில், இல்லத்தில் வழிபாடு செய்கின்ற பொழுது அவருடைய பாதத்தை வரைகிறோமே ஏன்? பல காலம் தவம் செய்த யசோதைக்கு மகனாக பிறந்த கண்ணன் மிகவும் குறும்புக்காரர்.
ஆயர் பாடியிலே யார் வீட்டிலாவது நுழைந்து வெண்ணெய், பால் முதலியவைகளை யாருக்கும் தெரியாது எடுத்து தின்று விடுவார். அவரை கண்டுபிடிக்க யசோதையும் மற்ற கோபியரும் ஒரு தந்திரம் செய்திருக்கிறார்கள். வீட்டு வாசலில் அரிசி மாவை போட்டு வைத்திருக்கிறார்கள். அதில் கால் பதித்து உள்ளே செல்லும் குட்டிக் கிருஷ்ணரது திருவடிகள் அப்படியே வெள்ளையாக காட்சி அளித்திருக்கிறது.
இது ஒரு வீட்டில் மட்டுமல்ல,அனைத்து வீடுகளிலும் அப்படியே நடந்திருக்கிறது. அவர் கால் பதித்த அனைத்து இல்லங்களிலும் செல்வமும் வளமையும் நிறைந்திருக்கிறது. பின்னர் கண்ணன் மதுராவுக்கு சென்றதும் அவரை நினைத்து அவரது வருகையை விரும்பிய கோபியர்கள், கண்ணணிட முறையிட்டு இருக்கிறார்கள்.
அப்போது அவர், “நீங்கள் என்னை கண்டுபிடிக்க தூய அரிசிமாவினால் என் கால்களை வரைந்தால் சூட்சும உருவில் உங்கள் இல்லங்களுக்கு நான் வருவேன் “என்று வாக்கு கொடுத்தாராம். அந்த முறையை பின்பற்றித்தான் நாமும் அவரது திருவடிகளை வரைகிறோம். அப்படி செய்வதால் வீட்டில் செல்வம், நிம்மதி ஆகியவை நிலைக்கும் என்பது தெய்வீகமாக நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
Article By – என். செல்வராஜ் கோவை.

