கொடி மரம் – தீயசக்திகளை அகற்றவும் இறையாற்றலை அதிகரிக்கவும் கோயிலையும் பக்தர்களையும் பாதுகாக்கவும் ஆலயங்களுக்கு முன்பாக நிறுவப்படுகிறது, என்கிறார்கள் பெரியோர்கள்.
கொடிமரம் என்பது மும்மூர்த்திகளையும் அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற அடையாளம் என்றும் சொல்லுவார்கள்.
கொடிமரம் மூலவருக்கு நிகரானது என்றும் கொடிமரம் அருகில் நின்று நாம் செய்யக்கூடிய எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்றும் சொல்வார்கள்.
கொடி மரத்தை தொட்டு வணங்குதல் மட்டும் போதாது சுற்றி வந்து வணங்க வேண்டும் என்றும் கொடிமரம் முன்பு கால நீட்டி விழுந்து வழிபடும்போது பின்புறம் எந்த தெய்வச்சன்னதியும் இருக்கக் கூடாது என்றும் கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
பொதுவாக கோயிலிலே அடிக்கடி வேள்விகள் நடத்தும் போது அவற்றை கொடிமரம் அருகே நடத்துவார்கள். அதனால் அந்த இடம் தெய்வீக சக்தி மிகுந்த இடமாக இருக்கக்கூடும்.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் கொடி மரத்தின் முன்னே செய்ய வேண்டும் என்பார்கள்.
நம்முடைய ஆன்மா இறைவனை தஞ்சமடைய வேண்டுமே ஆனால் நமது மனம் ஒருநிலையுடன் நிறுத்தப்பட வேண்டும் அதனை உணர்த்தவே கொடிமரம் நிமிர்ந்து நிற்பதாகவும் சொல்லுவார்கள்.
நம் முதுகு தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன என்றும் அதற்கு ஏற்பவே 32 வளையங்களுடன் கோயில் கொடிமரம் அமைக்கப்படுகிறது என்றும் சொல்லுவார்கள்.
நம் முதுகு தண்டில் மூல ஆதாரம் ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்னை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன.
பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராணவாயுவை சுழி முனை எனும் நடுநாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.
அதனால் மனம் ஒருநிலைப்படுமாம். அப்போது பேராற்றல் இறை சக்தி வெளிப்படும் என்கிற அடிப்படையில் தான் கொடிமரம் அமைக்கப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். கொடிமரம் எவ்வளவு உயரத்தில் அமைக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கிறது. அது கோயிலுக்கு கோயில் மாறுபடும் என்கிறார்கள்.
கொடிமரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும் படி அமைக்கிறார்கள். அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். சதுர பாகம் படைப்பு தொழிலுக்குரியவரான பிரம்மாவையும்,
அதற்கு மேல் உள்ள எண்கோண பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம் சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும் என்றும் சொல்வார்கள்.
Article By – என். செல்வராஜ், கோவை.