தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும்பான்மையாக கதாநாயகர்கள் தான் நீண்ட காலம் கோலோச்சுபவர்களாக இருப்பார்கள். கதாநாயகிகள் காலகட்டம் என்பது குறைவானதாகவே இருக்கும். விரைவில் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் அந்த காலம் தற்போது படிப்படியாக மாறி வருகிறது.
சினிமாவின் பரிணாமம் தற்போது ஓடிடி மற்றும் சமூகவலைதளங்கள் வழி நம் கைகளுக்கே வந்துவிட்ட நிலையில், மேற்கூறிய சூழல் வெகுவாக மாறிவருகிறது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் கதாநாயகிகள் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார்கள், சீரியலுக்கு சென்றுவிடுவார்கள் என்று இருந்த காலம் மாறி தற்போது திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட பேசும்படியான கதாபாத்திரங்களில் அனைத்து கதாநாயகிகளும் நடித்துவருகிறார்கள். இல்லை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கிறார்கள்.
இனி வரும் தலைமுறையில் கல்யாணம் என்பது கதாநாயகிகளுக்கு தடையாக இருக்கப்போவது இல்லை. இருப்பினும் கதாநாயகிகள் சினிமாவில் தொடர்ந்து நிலைத்து நிற்பது என்பது கடினமான ஒரு விஷயமே. தற்போது 2022 வெளியான தமிழ் திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நங்கூரமிட்டு நிற்கும் நடிகைகள் யார் யாரென்று பார்ப்போம்.
நயன்தாரா :
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த வருடமும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக, மக்களால் இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து பேசப்பட்டு வரும் கதாநாயகியாக இருந்துள்ளார். இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலை குவித்தது. ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் ஜூன் மாதம் ஊரறிய விக்னேஷ் சிவனை மணந்தார் நயன்தாரா.

அக்டோபர் மாதம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகினர் இந்த தம்பதி. இதற்கிடையில் தெலுங்கில் நயன்தாரா Godfather படம் வெளியாக, அடுத்ததாக தற்போது தமிழ், மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள Gold திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படி இந்த வருடம் முழுக்க ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் நயன்தாரா.
சமந்தா :
2021 ஆம் ஆண்டு இறுதியில் திருமண பிரிவு அறிவிப்பு. 2021 டிசம்பரில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் என அப்போதிலிருந்தே Internet Sensation ஆகி விட்டார் சமந்தா. சமந்தாவின் ஊ சொல்றியா பாடலை பார்க்க வேண்டுமென்றே புஷ்பா படத்திற்கு சென்றோர் எண்ணிக்கை அதிகம். காத்துவாக்குல 2 காதல் படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் சமந்தா, நயன்தாராவை காட்டிலும் சமந்தாவிற்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் உண்டு. காத்துவாக்கில் கதீஜாவாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து சென்றார்.

இருவரும் இப்படத்தில் நடித்திருந்ததால் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அடுத்து இந்த வருடம் சமந்தாவின் நடிப்பில் வெளியானது யசோதா. இதற்கிடையில் அதிர்ச்சியூட்டும் விதமாக மயோசிடிஸ் எனப்படும் (தசை அழற்சி) நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் சமந்தா. அந்த நோயிலிருந்து விடுபட அதனை எதிர்த்து போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி, ஷாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரச்னைகளிலிருந்து விரைவில் மீண்டு அடுத்த வருடம் இவருக்கு சிறப்பாய் அமைய வாழ்த்துவோம்.
த்ரிஷா :
தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து இன்று வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்திருக்கும் நடிகை த்ரிஷா. எப்போது பார்த்தாலும் எந்த மாற்றமுமின்றி என்றும் இளமையுடன் அதே பொலிவுடன் காட்சியளிக்கக் கூடிய நடிகை. இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஒரேயொரு திரைப்படம் பொன்னியின் செல்வன். தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான குந்தவை வேடமேற்று அசத்தியிருந்தார்.

இளவரசியின் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஈடு கொடுத்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் இன்று வரை இவரது பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
ராஷ்மிகா மந்தனா :
நேஷனல் க்ரஷ் என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமான நடிகை ராஷ்மிகா மந்தனா. ஏனெனில் பெரும்பாலும் நேரடி தமிழ் படங்களில் இதுவரை நடிக்காமல், சுல்தான் எனும் ஒரேயொரு படத்தில் மட்டுமே தமிழில் நடித்திருந்தாலும் கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படுபவர் ராஷ்மிகா. புஷ்பா படத்தின் சாமி சாமி பாடலும் அதில் அவரது நடனமும் உலகம் முழுக்க பலரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். புஷ்பா படத்தில் இடம்பெற்ற சமந்தாவின் பாடலுக்கு நிகராக இந்த பாடலும் கொண்டாடப்பட்டது.

இந்த வருடமும் இவருக்கு தமிழில் நேரடி படங்கள் எதுவுமில்லை. சீதா ராமம் படம் மட்டுமே தமிழில் வெளியானது. இந்நிலையில் தான் ஒரு மாபெரும் அறிவிப்பு வெளியானது. தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செயய்ப்பட்டார் ராஷ்மிகா. விஜயின் அதிதீவிர ரசிகை என ஏற்கனவே ராஷ்மிகா பல இடங்களில் கூறிவந்த நிலையில் இப்படத்தின் அறிவிப்பு மாபெரும் வைரலானது.
இன்றைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜயுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 2023 பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது. எனவே அடுத்த ஆண்டு ராஷ்மிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் பல மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
துஷாரா விஜயன் :
தனக்கு இதுதான் வருமென்று நிர்ணயித்துக் கொள்ளாமல், அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே வேறு வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று அதை அழகாக வெளிப்படுத்தியுள்ள ஒரு நடிகை என்றால் அது துஷாரா விஜயன். வெகுசில படங்களே நடித்திருந்தாலும் அனைத்து படங்களிலும் தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருப்பார்.

குறிப்பாக பா.ரஞ்சித் படங்களில் தனது நடிப்பை 100% வெளிப்படுத்தியிருப்பார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக முதல் இரவில் குத்தாட்டம் போட்டு தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர், இந்த வருடம் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் ஒரு நாடகக் குழுவில் வலம் வரும் மாடர்ன் பெண்ணாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இனி வரும் காலங்களில் இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.
ஸ்ரீநிதி ஷெட்டி :
இந்திய சினிமா வரலாற்றில் KGF படத்திற்கு என தனி பக்கங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டது. KGF படத்தின் முதல் பாகத்திலேயே நடித்திருந்தாலும் பெரிதாக அறியப்படாத கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இந்த வருடம் வெளியான KGF இரண்டாம் பாகத்தில் தான் வரும் காட்சிகளில் பார்வையாளர்களின் கண்கள் அவரை தாண்டி போகாத வகையில் கட்டிப்போட்டு விட்டார். குறிப்பாக மெஹபூபா பாடலில் தனது அழகால் அனைவரையும் அவர் வசம் ஈர்த்து விட்டார் என்றே சொல்லலாம்.

உலகம் முழுக்க இருக்கும் KGF பட ரசிகர்கள் அனைவரும் ஸ்ரீநிதி ஷெட்டியை கொண்டாடி வருகின்றனர். இனி இவர் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் என்றால் அது மிகையாகாது. இனி வரும் கதாபாத்திரங்களில் ஒரு நடிகையாக அவரது Performance எப்படி இருக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
ப்ரியங்கா மோகன் :
தமிழில் அறிமுகமான முதல் படமே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனுடன் என்பதால் முதல் படத்திலேயே பெரிய அளவில் ரசிகர்களை சம்பாதித்தவர் ப்ரியங்கா மோகன். அடுத்து முன்னணி நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படம் மாபெரும் வாய்ப்பாக அமைந்தது. இப்படம் இந்த வருட ஆரம்பத்தில் வெளியானது. தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்து ஜோடியாக இரண்டாவது ஹிட் கொடுத்தனர்.

அடுத்ததாக தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் திரையில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரியா பவானி சங்கர் :
செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரையில் தொடர் நாயகியாக வலம் வந்து தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக ஒவ்வொரு படியாய் ஏறி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் பிரபல கதாநாயகி ப்ரியா பவானி சங்கர். வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று வரை தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் இந்த வருடமும் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் என 4 படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்கள் அடுத்த வருட வரிசையில் உள்ளது.
வாணி போஜன் :
ப்ரியா பவானி சங்கர் போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருபவர் வாணி போஜன். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் 2020-ல் வெளியான ஓ மை கடவுளே படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து மீரா அக்காவாக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து முக்கியமான நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த வருடம் இவர் நடிப்பில் மஹான், மிரள் ஆகிய படங்கள் வெளியாகின. இது தவிர்த்து தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸும் வெளியாகியுள்ளது. அனைத்துமே மக்களால் ரசிக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு இவருக்கான படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இவானா :
மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இந்த வருட இறுதியில் தமிழில் வெளியான லவ் டுடே திரைப்படம் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கித் தந்துள்ளது என்றே சொல்லலாம். இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் கண்டுகளித்த இந்த படத்தில் தனது நடிப்புத்திறமையை முற்றிலுமாக வெளிப்படுத்தியிருந்தார் இவானா.

நிக்கிதாவாக படம் முழுக்க இவரது நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் அமைந்திருந்தது. கியூட்டாக நடனமும் ஆடியிருந்தார். அடுத்த வருடம் தென்னிந்திய சினிமாவில் இவானாவின் மார்க்கெட் பல மடங்கு உயரும். பல்வேறு மொழிகளிலும் இவர் கதாநாயகியாக நடிக்க பிரகாசமான வாய்ப்புகள் உண்டு.