சாமுராய் 22 ஆண்டுகளுக்கு முன்னால் ஜூலை 12 இதே நாளில் தான் 2002 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் படம் இந்த படத்தினுடைய கதைக்களம் கொஞ்சம் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. சேது படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகனாக அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு பிசியான காலகட்டத்தில் தான் இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்கியது பாலாஜி சக்தி வேல்.
மருத்துவக் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் மருந்துலகம் எவ்வளவு பெரிய உலகளாவிய வர்த்தகத்தைக் கொண்டு இருக்கின்றது என்பதை சொல்லி அதற்கு பின்னால் இருக்கின்ற அரசியலையும் அதை இயக்குகின்ற அரசியல்வாதிகளையும் பெரும் பண முதலைகளையும் சாதாரண மருத்துவ மாணவரான தியாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்த விக்ரமின் தலைமையில் அவரது நண்பர்கள் கூட்டணி அமைத்து கடத்துவதாக இந்த கதைக்களம் கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த படம் வெளிவந்த போது இவ்வளவு பெரிய மருந்து ஊழல் உலகம் இருக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டிய பாலாஜி சக்திவேலுக்கு விமர்சன ரீதியாக பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. தீவிரமான கொஞ்சம் இறுக்கமான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் அதை லேசாக்குவதற்காக அதில் மெல்லிய காதலும் சேர்க்கப்பட்டு ஒரு கதம்பமாக சாமுராய் கன கட்சிதமாக தன் பணியை செய்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
இந்த படத்திற்கு இசையமைத்தது ஹாரிஸ் ஜெயராஜ். எல்லா பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார். அதில் குறிப்பாக மூங்கில் காடுகளே, ஆகாய சூரியனை, என் மனதில் போன்ற பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. வசூல் ரீதியில் ஓரளவுக்கு நல்ல வெற்றியைப் பெற்றிருந்த சாமுராய் 22 ஆண்டுகள் கழித்தும் இன்றும் நம் நினைவலைகளில் அவரது சாம்ராஜ்யத்தை நிறுவிக் கொண்டிருக்கிறார் என்பது அந்தப் படத்திற்கும் அதன் கதைக்கும் அது இயக்கிய இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் சிறப்பானதாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



 
							 
							 
							 
							 
							 
							 
							 
							