தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படம் தல ரசிகர்களுக்கு ஒரு கேங்ஸ்டர் விருந்தாகவே அமைந்தது…

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பில்லா படத்தை தழுவி ரீமேக் செய்யப்பட்ட அஜித்தின் பில்லா (2007) தலையின் திரையுலக வாழ்க்கையில் தவிர்க்க முடியாத திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சக்ரி டோலட்டி இயக்கத்தில் பில்லா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது.

பில்லா-2 வில் அஜித்துடன் இணைந்து பார்வதி ஓமனக்குட்டன், புருனா அப்துல்லா, வித்யூத் ஜமால், சுதன்ஷு பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இவர்கள் அனைவருக்குமே இப்படம் தான் தமிழில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி என்றாலே ரசிகர்கள் கொண்டாடும் வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்பட்ட சமயத்தில் பில்லா-2 திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசை அமைத்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி யுவனின் பின்னணி இசை வழக்கம்போல் கதைக்கு உயிர் ஊட்டும் விதத்தில் அமைந்தது.

இப்படத்தை முதலில் அஜித்தின் பில்லா திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் சக்ரி டோலட்டி இயக்கினார்.

டேவிட் பில்லா எப்படி உருவெடுக்கிறார் எனும் வரலாறு கூறும் வகையில் இப்படத்தின் கதை அமைந்திருக்கும். தூத்துக்குடியில் இருந்து வரும் டேவிட் எப்படி அண்டர் வேர்ல்ட் டான் பில்லாவாக உருவெடுக்கிறார் என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.

இப்படம் உலகெங்கும் 2500 திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் டீசர் டிரைலர் இணையத்தில் வைரல் ஆனது. யூடியூபில் வெளியான பில்லா2 டீசர் டிரைலர் முதல் மூன்று நாட்களில் 5 லட்சம் பார்வைகளை பெற்று ஒரு புதிய சாதனை படைத்தது.
இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் அதை அஜித் ரசிகர்கள் இணையத்தில் #8YrsOfConquerorBILLA2 #8YearsOfBILLA2 என கொண்டாடி வருகின்றனர்.