Ilayaraja: இளையராஜா அவர் அப்படித்தான்: ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்கி விடுகிறது அத்தனை ராகமும், ஆனால் இந்த ஒற்றை மனிதனால் எப்படி எண்ணிலடங்கா கீதங்கள் படைக்க முடிகிறது, அப்படியென்றால் அவர் அப்படித்தான்.
பெரும்பாலான இசையமைப்பாளர்கள் இசை கோர்ப்பார்கள், சிலர் இசையமைப்பார்கள், சிலர் பயன்படுத்துவார்கள்…! ஆனால் இவர் ஒருவரே இசையை படைத்து, உருவாக்கி, உயிரூட்டி ஒரு தாயைப் போல அன்புடன் நமக்கு ஊட்டி நம்மை மகிழவைக்கிறார், அப்படியானால் அவர் அப்படித்தான்.
தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் தேனியில் ஏதோ சிறு மூலையில் இருக்கும் பண்ணைப்புரத்தில் இருந்து கிளம்பி வந்த பாவலர் சகோதரர்கள் பாட்டிசைத்த கதை நாடறியும், ஆனால் அந்த பயணமும் சிரமமும் யாரறிவார். ஞான தேசிகன் இளையராஜா ஆனார் என்பது வெறும் வார்த்தைகளா?, அது ஒரு மாபெரும் வாழ்க்கை இன்னும் சொல்லப்போனால் பலர் வாழ்க்கையை உத்வேகப்படுத்தி எந்த ஒரு சாதாரண நிலையில், வறுமையின் விளிம்பில் இருக்கும் மனிதனும் கடின உழைப்பினால் மாமேதையாக மாற முடியும் என்பதற்கான சான்று, பண்ணைபுரத்தில் பிறந்தவரும் பஞ்சமுகி படைக்க முடிகிறதென்றால் இந்த நம்பிக்கையை எல்லோருக்கும் இலகுவாக விதைத்ததினால் அவர் அப்படித்தானே.

நமக்கு எத்தனை வயதோ, நம் எண்ணங்கள் எத்தனை பெரிதோ, எல்லாரையும் சின்னக் குழந்தையாக்கி சிறிய தாலாட்டும் தருகிறார், சீரான இசைக்கலைஞர்களோடு சிம்பொனியும் தருகிறார்,அயல்நாட்டில், அப்படியானால் அவர் அப்படித்தான்.
கிராமமோ நகரமோ, குடிசையோ கோபுரமோ, மொழியறிந்தவரோ அறியாதவரோ, படித்தவரோ பாமரரோ, இளையோரோ முதியோரோ, இவ்வளவு ஏன்? இறக்க போகிறவரோ பிறக்க போகிறவரோ எல்லோருக்குமான கொண்டாட்டம் எனில் அது இளையராஜாவின் இசை தானே, அவர் பாடல்களை கேட்கும் நம்மையே இறைநிலைக்கு இட்டுச்செல்லும் போது, இசைபடைக்கும் அவர் இறைவனின்றி வேறு யார். அவர் அப்படித்தான்.
இசைஞானி இளையராஜா இறைவன் போலத்தான்…!

