Cinema News Specials Stories

Vijay Deverakonda – Is He Still Charm?!

Vijay-Deverakonda

2011 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானலும், இந்திய சினிமா ரசிகர்களிடம் 2017 ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டியாக தான் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டியாக தனது முரட்டுத்தனமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்தார்.

இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படமாக அர்ஜூன் ரெட்டி அமைந்தது. தொடர்ச்சியாக அத்திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு இளம் காதல் நாயகனாக இடம் பிடித்தார் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டியாக இந்திய அளவில் பிரபலமான விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. அடுத்ததாக நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘மஹாநடி’ திரைப்படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார்.

கீதா கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம்’ என்ற ஒரு பாடல் மூலம் ராஷ்மிகாவும் இந்திய அளவில் பிரபலமானார். அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டேவிற்கு பிறகு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி மிகப்பெரிய அளவில் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இன்கேம் இன்கேம் பாடலுக்கு உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர்.

தொடர்ந்து நோட்டா, Taxiwaala உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்தாலும் ஒரு ரொமான்டிக் ஹீரோவாக மட்டுமே விஜய் தேவரகொண்டா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். குறிப்பாக எக்கச்சக்க பெண் ரசிகைகள் இவருக்கு உண்டு. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களின் அளவிற்கு மற்ற படங்கள் கொண்டாடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ராஷ்மிகா மந்தனாவுடன் டியர் காம்ரேட், அடுத்ததாக World Famous Lover என மீண்டும் ஏற்கனவே பார்த்த காதல், காதல் தோல்வி கதாபாத்திரங்களில் நடித்தார். இவை ஏற்கனவே வெளியாகியிருந்த படங்களின் சாயலில் இருந்தாலும் ஓரளவு நன்றாக ஓடியது. ஒரு காதலனாக விஜய் தேவரகொண்டாவை பல படங்களில் பார்த்து விட்டோமே என சலிப்பு தட்டிய நேரத்தில் தான் LIGER படத்தின் மூலமாக ஒரு குத்துச்சண்டை வீரராக அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர். மேலும் ‘ஜன கன மன’ எனும் திரைப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கவுள்ளார் தேவரகொண்டா. இத்திரைப்படம் 2023 ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார் விஜய் தேவரகொண்டா என்பது தான் அந்த அறிவிப்பு. குடும்பத் திரைப்படமாக உருவாகும் இந்த படம் இதுவரை கூறப்பட்ட படங்களை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது. இப்படி தொடர்ச்சியாக தனது தனிப்பட்ட நடிப்புத் திறனால் அனைவரையும் கவர்ந்து வரும் விஜய் தேவரகொண்டா, இனி வரும் படங்களிலும் அதனைத் தொடர வேண்டும் என சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo