தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு காமெடி நடிகர் என்றால் செந்தில் அவர்கள் தான். இவரும் கவுண்டமணி அவர்களும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இப்போதும் மக்களிடம் வரவேற்பு பெறுகிறது. இருவரும் நகமும் சதையுமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். இருவரையும் தனித்தனியாக ஸ்க்ரீனில் பார்ப்பது மிகவும் அபூர்வம்.
தனக்குக் கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி ‘பேக் டு பேக்’ பல வெற்றிப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். அதில் கவுண்டமணிக்கும் பெரும் பங்குள்ளது. இருவரின் காம்போவையும் பார்த்து தமிழ் சினிமாவின் ‘லாரல் அண்ட் ஹார்டி’ என்று செல்லமாக அழைத்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் பட வாய்ப்பினைத் தேடிப் போன காலங்கள் மறைந்து இவர்களைத் தேடி வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின.
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு செந்தில்தான் ஃபேவரைட் காமெடியன். மறைந்த நடிகை ஶ்ரீதேவிக்கும் இவர்தான் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி நடிகராம். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார். செந்திலுக்கும் ஶ்ரீதேவியை ரொம்ப பிடிக்குமாம். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் ஆதிக்கத்தில் இருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெள்ளி விழா கண்டது. இதனால் பல இயக்குனர்களும் தங்கள் படங்களில் இவர்களை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினார்கள். இவர்கள் இருவரும் நடித்த பெரும்பாலான படங்களில் கவுண்டமணியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். ஆனால் சில படங்களில் கவுண்டமணியை தூக்கி சாப்பிட்டுள்ளார் செந்தில்.

கரகாட்டக்காரன் : நடிகர் ராமராஜனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் கரகாட்டக்காரன். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் இப்படத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில். இப்படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி பெரிதும் பேசப்பட்டது. ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க என்ற கவுண்டமணியின் கேள்விக்கு அதானா இது என்ற செந்தில் சொல்லும் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
ஜென்டில்மேன் : தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். இப்படத்தில் செந்திலின் குறும்புக்கு எல்லையே இருக்காது. கூட்டமாக இருக்கும் பெண்களிடம் செந்தில் விளையாடுவது, அதைப்பார்த்து கவுண்டமணி கோபப்படுவது என பல காமெடிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படத்தில் செந்திலின் டிக்கிலோனா, டிக்கிலோனா காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
லக்கி மேன் : பிரதாப் போத்தன் இயக்கத்தில் கார்த்தி, கவுண்டமணி, செந்தில், சங்கவி நடிப்பில் வெளியான திரைப்படம் லக்கி மேன். இப்படத்தில் கவுண்டமணி எமதர்மனாகவும், செந்தில் சித்திரகுப்தராகவும் நடித்திருந்தார். இப்படத்தில் மேலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்து இவர்கள் படும்பாடு மிகவும் நகைச்சுவையாக இருக்கும். இப்படத்தில் கவுண்டமணியை விட செந்திலின் தாக்கம் அதிகம்.
சேதுபதி ஐபிஎஸ் : பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சேதுபதி ஐபிஎஸ். இப்படத்தில் கவுண்டமணிக்கு வேலை வாங்கித் தருவதாக செந்தில் சொல்ல, அதை நம்பி இருந்த வேலையையும் விட்டுவிட்டு வருவார் கவுண்டமணி. கடைசியில் என்ன வேலை என்று கவுண்டமணி கேட்க, நடுகடலில் கப்பல் நின்னு போனா இறங்கி தள்ளனும் என்று செந்தில் சொல்லும் காமெடி இன்றளவும் அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கிறது.
வைதேகி காத்திருந்தாள் : விஜயகாந்த், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். லைட் வாடகைக்கு விடும் கவுண்டமணி கடையில் வேலை பார்க்கும் செந்தில் பெட்ரோமேக்ஸ் லைட்டை இதில் எப்படிண்ணே எரியும் என்று உடைத்து விடுவார். அப்போது ஒரு பெண் பெட்ரோமாக்ஸ் லைட் வேண்டும் என்று கேட்பார் .அதற்கு கவுண்டமணி பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா என்று கேட்கும் காமெடி சிரித்து, சிரித்து கண்களில் கண்ணீர் வரச் செய்யும்.

இவரது நகைச்சுவையான வசனங்கள் சில :
• அந்த இன்னொன்னு தாண்ணே இது (கரகாட்டக்காரன்)
• நேர்மை எருமை கருமை
• பாட்றி என் ராசாத்தி
• டேய் அண்ணனுக்கு பொற வைடா அண்ணன் நன்றி உள்ளவரு
• டேய்! அண்ணன் சிகப்புடா – கோயில் காளை
• புலிக்குட்டி தம்பி பூனக்குட்டி, பூனக்குட்டி தம்பி புலிக்குட்டி
• இது மந்திரிச்சு விட்ட தாயத்து இல்ல, இது தான் சயனைடு சப்பி
• அய்யய்யய்யய்யோ, அறிவுக்கொளுந்துண்ணே நீங்க
• கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்! என்னண்ணே உடைச்சிட்டீங்க! (வைதேகி காத்திருந்தாள்)
• ஸ்பேனர் புடிச்சவன் எல்லாம் மெக்கானிக்குன்னு சொல்றான் (சேரன் பாண்டியன்)
• அண்ணே! ஆத்தா பல்லு ஏண்ணே அப்படி இருக்கு! (சின்ன கவுண்டர்)
லாரி கிளீனராக மண்ண தொட்டு கும்பிடனும் படத்தில் ரேடியேட்டரில் தண்ணி ஊற்றி நான் ஒரு அனாதை னு கவுண்டரிடம் சொல்லுமிடம் மற்றும் பாய்ஸ் படத்தில் இன்பர்மஷன் இஸ் வெல்த் னு சொல்ற இடமும் இவர் நடிப்பிற்கு சான்று.

நடிகர் செந்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சன்டிவியில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆரம்பமான ராசாத்தி சீரியலிலும் நடித்துள்ளார். எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் இவரின் இடத்தை நிரப்ப யாரும் வருவதுமில்லை, வரப்போவதுமில்லை.