எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன. ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் ஆலயத்தில் தரிசனம் செய்ய போவதற்கு முன்பு நம்மிடம் உள்ள மோசமான குணங்களை இங்கு பலியிட்டு செல்வதாக வேண்டி கொண்டு செல்ல வேண்டும்.
மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்?. நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார். எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும். எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும்.
அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம். இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியம . எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, காமம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும்.
‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும். மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.
பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது,
அவர் அருள் நம்மை ஆக்கிரமித்து,ஆசீர்வதிக்கும். பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு.
அதாவது நமது பிறப்பு, இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும் என்றும் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.
சில கோவில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது. பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்… நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும், ஆசை போய் விடும், கோபம் போய் விடும், தீராத பற்று போய் விடும், நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது, உயர்வு – தாழ்வு மனப்பான்மை விலகும், வஞ்சகக் குணம் வரவே வராது, ஆக பலி பீடம் மனிதனை மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது,பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.
Article By – என். செல்வராஜ், கோவை.



 
							 
							 
							 
							 
							 
							 
							 
							