ஒரு முறை திருப்பரங்குன்றம் மலையில் நக்கீரர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அன்ருகிலிருந்த அரச மரத்தில் இருந்து ஒரு சருகு கீழே இருந்த குளத்தில் விழுந்தது. அந்த சருகு நீருக்குள் பாதியும், நீருக்கு மேல் பாதியுமாய் நின்றது. நீருக்கு மேல் இருந்த் பகுதி பறவையாவும், நீருக்குள் அடியில் இருந்த பகுதி மீனாகவும் மாறி, மீன் தண்ணீருக்குள் இழுக்க, பறவை மேல் நோக்கி இழுக்க, அந்த சலசலப்பில் நக்கீரர் தவம் கலைந்தது. அவர் இந்த போராட்டத்தை பார்த்து மீனையும் , பறவையையும் தன் விரல் நகத்தால் பிரித்து விட்டார். பிரித்த அந்த நொடியே இரண்டும் இறந்து விட்டன.
இதற்காகவே காத்து இருந்தது போல் உக்கிரன், அண்டா பரணன் எனும் பூத கணங்கள் நக்கீரரைஅருகில் இருந்த குகைக்குள் தள்ளி பாறையை போட்டு குகை வாசலை மூடின. சிறைபிடிப்பில் துயருற்ற நக்கீரர் அந்த சிறையில் இருந்து விடுபட முருகனை துதித்து பாடிய பாடல்களே ‘திருமுருகாற்றுப்படை’ என ஆழைக்க படுகிறது. இதில் மனமுருகிய முருகன் தன் வேலால் அந்த குகை பாறையை பிளந்து நக்கீரருக்கு விடுதலை அளித்தார்.
’திருமுருகாற்றுப்படை’ பாடி தன் துயர் நீங்கிய நக்கீரர் அந்த பாடலில் முருகனின் திருத்தலங்கள் ஆறு என பாடியுள்ளார். ஆற்றுபடை வீடுகளான அவையே, ஆறுபடை வீடு என அழைக்க படுகிறது.
ஆற்றுபடுத்துதல் என்பது வழிபடுத்துதல் என்று அர்த்தம். துயரத்தில் சிக்கி தவிப்பவர்களை வழிபடுத்தும் நூலே ’திருமுருகாற்றுப்படை’.
நக்கீரர் தந்த வரிசைப்படி முதல் படை வீடு திருப்பரங்குன்றம் . நக்கீரர் தான் குகையிலிருந்து விடுபட அருள் புரிந்த திருப்பரங்குன்றத்தையே முதல் படை வீடாக வைத்து ’திருமுருகாற்றுப்படை’ பாடலை தொடங்குகிறார்.
அதனால் தான் திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இடம் பிடித்தது.
ஓம் சரவண பவ.