உலக அரங்கில் ஒவ்வொரு நாடும் தங்களுடைய கொள்கைகளையும் நோக்கங்களையும் வளர்ச்சிகளையும் பிரதிபலிக்கின்ற வகையிலும் தங்கள் நாடுகளின் அடையாளமாக உலக அரங்கில் தங்கள் தனித்துவத்தை காட்டுவதற்காகவும் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு என பிரத்யேகமாக கொடிகளை வைத்திருக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 22ஆம் தேதி இந்திய தேசத்தின் கொடி நாளாக கொண்டாடப்படுகின்றது. ஏன் ஜூலை 22 ஆம் தேதியான இன்றைய தினத்தில் இந்திய நாடு கொடி தினத்தை கொண்டாடுகிறது என்பதற்கு பின்னணியில் ஒரு நீண்ட வரலாற்றுப் பயணம் இருக்கின்றது.
முதன் முதலில் 1906 ஆம் ஆண்டு தான் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தங்களுக்கான கொடியை நாமே தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பின்காலி வெங்கையா என்பவர் ஒரு கொடியை உருவாக்கினார். அந்த கொடியில் சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய மூன்று நிறங்களும் செங்குத்தாக இருக்கின்ற வகையிலும் கொடியின் வலப்புற மேற்பரப்பில் வெள்ளை நிறத்தில் பிறையும் நட்சத்திரங்களும் இருக்குமாறு அதை அமைத்திருந்தார்.
பிறகு 1917 இல் காவி வெள்ளை பச்சை என மூன்று நிறங்கள் கொண்ட கொடி உருவாக்கப்பட்டு இடது பக்கத்தின் மேல் பகுதியில் வெள்ளை நிற பிறையும் நட்சத்திரங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. பிறகு அது கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டு 1921 இல் அந்த கொடிக்கு மத்தியில் அசோக சக்கரம் இருக்குமாறு மகாத்மா காந்தியின் உடைய வேண்டுகோளுக்கு இணங்க அது இணைக்கப்பட்டது.
அந்த அசோக சக்கரத்தில் இருக்கின்ற 24 ஆரங்கள் புத்தரின் கொள்கைகளை விளக்குவதாக அமைந்திருக்குமாறு அது பார்க்கப்பட்டது. 1931 இல் இந்திய தேசிய காங்கிரஸ் இந்த கொடியை ஏற்றுக் கொண்டது. சுதந்திர வேட்கை வேகமாக நகர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது 1947 ஜூலை 22 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்த கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டு அன்று முதல் கொடிநாள் இன்று வரை கொண்டாடப்படுகின்றது.
தைரியம் தியாகம் சக்தி இவை மூன்றையும் வெளிப்படுத்தும் வகையில் காவி நிறமும், அமைதி உண்மை தூய்மை ஆகிய குணங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் வெண்மை நிறமும், இந்திய நிலங்களின் வளமையையும் வளர்ச்சியையும் பிரதிபலிக்கின்ற வகையில் பச்சை நிறமும் இந்திய தேசியக் கொடியில் அமைந்திருக்கிறது.
நடுவில் இருக்கின்ற அசோக சக்கரம் 24 மணி நேரமும் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதை காட்டுகின்ற வகையில் அசோக சக்கரத்தின் 24 ஆரங்கள் கொடியின் நடுவில் இருக்கின்றன. இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய இந்திய தேசியக்கொடி பல்கலைக்கழகங்கள், வரலாற்று நினைவிடங்கள், கலாச்சார மையங்கள் அரசு விழாக்கள் என பல்வேறு இடங்களில் மிக மரியாதையுடன் ஏற்றப்படுகின்றது.
ஒவ்வொரு இந்தியனின் பிரதிபலிப்பாக இந்திய தேசத்தின் அடையாளமாக ஒட்டுமொத்த இந்தியாவின் ஒற்றுமையாக உலக அரங்கில் பட்டொளி வீசி பறக்கின்றது இந்திய தேசியக்கொடி, இந்திய அரசியலமைப்பு சபையால் 1947 ஜூலை 22 ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் இந்த தினம் இந்தியாவில் கொடி தினமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த தினத்தை கொண்டாடுவதிலும் தேசியக் கொடியை உயர்த்தி பிடிப்பதிலும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையும் கடமையும் இருக்கிறது.