மயில்சாமி எனும் ஒரு மனிதனின் மறைவு எப்படி இத்தனை பேரை துக்கத்திற்கு ஆளாக்கியுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார்? மயில்சாமியை அறிந்தவர்கள் அவருடன் பழகியவர்கள் அவரைப் பற்றி இறுதி அஞ்சலியில் சொல்லிய சில விஷயங்களை பார்ப்போம்.
ரொம்ப கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தவர் மயில்சாமி. யார் உதவி என கேட்டாலும் உடனே யோசிக்காமல் முதல் ஆளாக சென்று உதவக் கூடியவர். கஷ்டம் என வருபவர்களுக்கு தானம் செய்யக் கூடிய, அள்ளி வழங்கக் கூடிய குணம் படைத்த நல்ல உள்ளம்.
நண்பர்கள் கூடும் போது மற்றவர்களை செலவு செய்ய விடாமல் தானே செலவு செய்யக் கூடியவர். நண்பர்களுக்கு பிடித்ததை சாப்பிட வைத்து அழகு பார்க்கக் கூடியவர். உடன் இருப்பவர்கள் யாராவது சாப்பிடாமல் இருந்தால் உடனே பணத்தை எடுத்து கொடுத்து சாப்பிட சொல்வார். நிகழ்கால வள்ளல்.
ஆடம்பரமில்லாத எளிய மனிதர். தனக்காக எதையும் சேர்த்து வைக்காமல் அனைவருக்கும் உதவி செய்யக் கூடியவர். தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான ஆட்களும் இவரிடம் உதவியை பெற்றிருப்பார்கள். நியாயத்திற்காக கோபம் கொள்ளக்கூடியவர்.

மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்ட சமயங்களில், கொரோனா காலங்களில் அவரது சுற்றுவட்டாரத்தில் வசித்த பலருக்கும் சாப்பாடு, அரிசி என நிறைய உதவிகள் செய்துள்ளார். தலை சிறந்த அற்புதமான நடிகர்.
இவர் வந்தால் போதும் சூட்டிங் ஸ்பாட் எனர்ஜியாக மாறிவிடும். மிகவும் கலகலப்பாக இருக்கும். பல மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுகளின் முன்னோடி இவர். முதன் முதலில் சிரிப்போ சிரிப்பு என ஒரு முழுநீள மிமிக்ரி நகைச்சுவை கேசட் வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து நடிகர்களையும் போல் மிமிக்ரி செய்திருப்பார்.
ஒரு நல்ல குடும்பத்தலைவனாக அவரது அனைத்து கடமைகளையும் முடித்துச் சென்றுள்ளார். அவர் யாரை பார்த்தும் பொறாமை கொண்டதில்லை. அவரைப் பார்த்து பலரையும் பொறாமை பட வைத்துள்ளார். எப்பொழுதும் நமச்சிவாயம் என முணுமுணுத்துக் கொண்டே இருக்கக் கூடிய தீவிர சிவபக்தர். அப்படிப்பட்ட தீவிர சிவபக்தரை மகா சிவராத்திரியில் அழைத்துக் கொண்டார் சிவன்.
இறுதி அஞ்சலியில் கூட உறவினர்கள், சினிமா நண்பர்களை தாண்டி அவரது தெருவிலிருக்கும் துப்புரவு தொழிலாளர்கள், உணவு டெலிவரி செய்யும் நபர்கள், டீக்கடைக்காரர்கள் என அனைவரும் வந்து அவருக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஒரு மனிதனுடைய மரணம் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை சொல்லும். பணத்தை தாண்டி அதிக மனிதர்களை சம்பாதித்துள்ளார் மயில்சாமி. இறுதி அஞ்சலி செலுத்திய பலரும் இந்த விஷயங்களை தான் கூறியிருக்கின்றனர். தான் பார்க்கும் மனிதர்களை சாதாரணமாக கடந்து போகாமல், ஒவ்வொருவரிடமும் நெருங்கிப் பழகி ஒன்றாக கலந்திருக்கிறார் மயில்சாமி.
அவர் வாழ்வு நமக்கு உணர்த்துவது இதுதான்… சக மனிதரை மனிதராக பாருங்கள், மனிதர்களை நேசிக்க பழகுங்கள், இல்லை என்போருக்கு முடிந்த உதவி செய்யுங்கள். மயில்சாமி எனும் மனிதனுக்கு மரணம் கிடையாது. ஒவ்வொரு மனிதரின் மனித நேயத்திலும், அன்பிலும், உதவியிலும் மயில்சாமி எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.