லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் கூழாங்கல். இப்படத்தை குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குனர் P.S.வினோத் ராஜ் இயக்கும் இப்படத்தை தயாரிக்க நயன்தாரா தான் முடிவு செய்துள்ளார் எனவும், இந்த முடிவில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும் விக்னேஷ் சிவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் டைட்டில் Poster-உடன் சேர்த்து ஒரு கடிதத்தையும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.
அக்கடிதத்தில், அறிமுக இயக்குனர் வினோத் ராஜின் கூழாங்கல் திரைப்படம் தங்களுக்கு வியப்பான, வித்யாசமான ஒரு நல்ல உணர்வை தருவதாகவும், தாங்கள் அனுபவித்த அந்த உணர்வை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இப்படத்தை தயாரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவிற்கும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
வித்யாசமான கதைகளுக்கு யுவனின் இசை உயிரூட்டும் விதத்தில் அமையும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இப்படத்தில் யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் காம்போ தயாரிக்கும் இப்படத்தை குறித்த கூடுதல் Update-கள் விரைவில் வெளிவரும் என டைட்டில் Poster-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்கள்.