Stories Viral

உலகக்கோப்பை மீது கால் வைத்தது ஏன்? முதல் முறையாக மௌனம் கலைத்த மிட்செல் மார்ஷ்!

கடந்த மாதம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பை உருவாக்கியது, ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பையின் உச்சியில் தனது கால்களை வைத்தபடி மதுவுடன் அமர்ந்திருந்த புகைப்படம் தான் அது. இது உலகக்கோப்பைக்கு அவமரியாதை என்று பல இந்திய ரசிகர்கள் விமர்சித்தனர். இந்திய வீரர் முகமது ஷமி கூட மார்ஷினின் இந்த செயலால் “காயமடைந்ததாக” பதிவிட்டிருந்தார்.

சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலான நிலையில் இப்பொழுது மார்ஷ் இதுகுறித்து தனது கருத்தை கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் SEN உடன் மார்ஷ் பேசுகையில், “இதில் எந்த விதமான அவமரியாதையும் இல்லை, நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை, அது கடந்து விட்டது, எல்லோரும் என்னிடம் வந்து இந்த விஷயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது என்று சொன்னாலும் நான் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுவது இல்லை என்பதால், நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நான் மீண்டும் இந்த செயலை செய்தாலும் அது அவமரியாதை கிடையாது. இதில் பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. ” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் உத்தரப்பிரதேச மாநில அலிகாரில் உள்ள டெல்லி கேட் காவல் நிலையத்தில் இதுகுறித்து மார்ஷ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புகார் பெறப்பட்டாலும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மேலும் சைபர் செல் அறிக்கையைப் பெற்ற பிறகே அடுத்த கட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும் என்று காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Article By Sathishkumar Manogaran