வேழம், களிறு, களபம், மாதங்கம், கைம்மா, ஊம்பர், உம்பல், அஞ்சனாதி, இருள், அரசுவா, ஆம்பல், அறுபடை, இபம், குஞ்சரம், வாரணம், தும்பி, கும்பி என நூற்றுக்கும் அதிகமான பெயர்களில் சங்க இலக்கியங்களில் அழைக்கப்பட்ட ஒரு விலங்கை காப்பாற்ற வேண்டும் என்ற உலகளாவிய எண்ணத்தில் உருவானது தான் இன்றைய தினம். ஆம் ஏப்ரல் 16 இன்று “உலக யானைகள் பாதுகாப்பு தினம்”.
சங்க இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட யானைகள் என்ற மாபெரும் விலங்கு இன்று பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டும்; அழிந்து கொண்டும் இருக்கிறது. அதை பாதுகாக்கும் நோக்குடன் தான் 2012-ல் தாய்லாந்து நாட்டில் யானைகளை பாதுகாக்கும் அமைப்பு தொடங்கப்பட்டு இன்று உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது.
உலகில் மனிதனுக்கு அடுத்தபடியாக நீண்ட ஆயுட்காலம் கொண்ட விலங்கு யானைகள். அதனுடைய சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். டால்ஃபினுக்கு அடுத்தபடியாக அதிக அளவு அறிவு சார்ந்த உயிரினமாக யானைகள் கருதப்படுகின்றது. ஒரு நாளைக்கு 140 இல் இருந்து 300 கிலோ வரை உணவு உண்ணுகின்ற யானைகள், கூட்டமாக வாழ்கின்ற வாழ்க்கை முறையை கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட யானைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றது. ஒன்று ஆப்பிரிக்காவில் புதர்களில் வாழும் யானைகள், மற்றொன்று ஆப்பிரிக்க காடுகளில் வாழ்கின்ற யானைகள், மூன்றாவது ஆசியாவில் வாழ்கின்ற யானைகள். யானைகளின் சிறப்பம்சமே அதன் தும்பிக்கையும் தந்தங்களும் தான்.
குறிப்பாக அதன் தந்தங்கள் தான் அதற்கு அழகையும் அழிவையும் தருகிறது. ஆப்பிரிக்கா காடுகளில் வாழுகின்ற யானைகளில் ஆண் பெண் இரண்டு இனத்திற்கும் தந்தங்கள் உண்டு. ஆனால் ஆசியாவில் வாழ்கின்ற யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தமுண்டு. இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளில் இரண்டு பாலினம் கொண்ட யானைகளுக்கும் தந்தங்கள் இல்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டமாக வாழ்கின்ற பண்பு கொண்ட இந்த யானைகள் பெரும் காடுகளில் தங்களுக்கான வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு காடுகளை வருடம் தோறும் சுற்றி வருகிறது. ஒரு முறை புறப்பட்ட இடத்திலிருந்து அடுத்த முறை அதே இடத்திற்கு வருகின்ற பொழுது ஏறத்தாழ ஓராண்டுகள் நிறைவு பெற்றிருக்கும்.
அப்படி ஓராண்டுகள் காடு முழுக்க சுற்றுகின்ற யானைகள் அங்கங்கே மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் பயிர்களையும் உண்டு விட்டு புதிய வழிகளையும் புதிய பயிர்கள் வளர்வதற்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திச் செல்கின்ற மாபெரும் இயற்கை விவசாயியாக யானைகள் திகழ்கின்றன.
இந்த யானைகள் தான் மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கான பெரும் வாய்ப்புகளை வழங்கிச் செல்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட யானைகள் பெரும்பாலும் தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றன. இதனால் பல யானைகள் வேட்டையாடப்படுகின்றன.
மனித குலத்தின் சுயநலத்தால் காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் வாழ்விடங்கள் குறைக்கப்படுகிறது. அதனால் அதன் தேவைகளுக்காக தண்ணீரைத் தேடி விவசாய நிலங்களுக்குள் அடியெடுத்து வைக்கிறது. இதனால் மனித குலத்திற்கும் யானைகளுக்குமான மோதல் ஆங்காங்கே அதிகரிக்கிறது.
அதே நேரத்தில் ரயில் போன்ற பெரும் வாகனங்களில் மோதி ஏற்படும் விபத்துகளால் யானைகளின் இறப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம். இதைத் தவிர, இதய நோய், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், வயது மூப்பு போன்ற காரணங்களாலும் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.
யானைகள் என்பது காடுகளின் அடையாளம் மட்டுமல்லாமல், அது வனங்களுக்குள் பல்வேறு இடங்களுக்கு செல்வதால் ஓர் இடத்தில் இருக்கின்ற செடிகளும் கொடிகளும் மற்றொரு இடத்தில் புதிதாக முளைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் புதிய நிலத்தில், புதிய சூழலில் பயிர்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் பெருகுகின்றன.
இப்படிப்பட்ட யானைகள் மனிதனின் வணிக நோக்கத்திற்காக உலகம் முழுக்க கொல்லப்பட்டுக் கொண்டு இருப்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு தான் 2012-ல் தாய்லாந்து நாட்டில் “சேவ் தி எலிபன்ட்” என்ற தினம் கொண்டாடப்பட்டு வருடம் தோறும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகின்றது.
அப்படிப்பட்ட இன்றைய நாளில் யானைகளை மட்டுமல்லாது மற்ற வன விலங்குகளையும் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டும். காரணம் இந்த உலகம் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தம் அல்ல, எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது.
அவற்றின் உரிமைகளை வலுக்கட்டாயமாக தனது அறிவாலும் ஆயுதங்களாலும் பறித்துக் கொள்வது எந்த விதத்திலும் மனித குலத்திற்கு நல்லது அல்ல என்பதை உணருகின்ற; உணர்த்துகின்ற வகையில் தான் இன்றைய தினம் யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.