50-ற்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி கதாநாயகிகளாக நடித்தவர்களை கூட மக்கள் மறந்துபோகும் இந்த Modern திரையுலகில், வெறும் 5 தமிழ் படங்களில் மட்டுமே முன்னணி கதாநாயகியாக நடித்து, மக்கள் மனதில் என்றும் நீங்காத நாயகியாக இருப்பவர் ஷாலினி.
பேபி ஷாலினி
ஷாலினி தன் திரையுலக வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாகத் தான் தொடங்கினார். 1983-ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்தியதே அனுராகம் எனும் மலையாள படத்தில் தான் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன் பிறகு பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாலினி, 1984-ல் நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஓசை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஷாலினி தனது 4 வயதில் இருந்து 12 வயது வரை 41 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகியாக ஷாலினி
தென்னிந்திய திரையுலகில் பேபி ஷாலினியாக வளம் வந்த இவர், 1992-ல் அணியத்தி பிராவு எனும் மலையாள படம் மூலம் முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படம் தான் இதன் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
41 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி, வெறும் 12 படங்களில் தான் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். அதிலும் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலை பாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய 5 படங்கள் மட்டும் தான் தமிழ்ப்படங்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மாதவனுடன் ஷாலினி இணைந்து நடித்த அலைபாயுதே திரைப்படம் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் ஷாலினி நடித்த ‘சக்தி‘ கதாபாத்திரம் காலங்களைத் தாண்டியும் மக்கள் மனம் கவர்ந்த கதாபாத்திரமாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
2001-ல் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த பிரியாத வரம் வேண்டும் படம் தான் ஷாலினி கடைசியாக நடித்த படம். தமிழில் 5 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த 5 படங்களுமே ஷாலினிக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.
1999-ல் அமர்க்களம் படத்தின் ஷூட்டிங்கின் பொழுது தான், தல அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தல அஜித்துடன் திருமணம் ஆனதைத் தொடர்ந்து ஷாலினி படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
படங்கள் நடிப்பதை ஷாலினி நிறுத்திவிட்டபோதும், அவரது கதாபாத்திரங்களுக்கு இருந்த வரவேற்பும், அவருக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டமும் இன்னும் குறையவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை. இன்று (நவம்பர் 20, 2019) அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், தல அஜித்தின் ரசிகர்களும் வெகு சிறப்பாக சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். #HappyBirthdayShaliniAjith என்ற ஹாஷ்டாகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து ஷாலினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஷாலினிக்கு இந்த பிறந்தநாள் சிறந்த நாளாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகிறோம்.
Add Comment