நடிகர் விமல் கதாநாயகனாக நடித்து A.சற்குணம் இயக்கிய திரைப்படம் களவாணி. இப்படம் வெளியாகி இன்றுடன் (ஜூன் 25, 2020) பத்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் #10YearsOfKalavani ட்ரெண்ட் ஆகி வருகிறது.
குறைந்த பொருட்செலவிaல் எடுக்கப்பட்ட இப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றதோடு சேர்த்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. விமலுடன் இணைந்து ஓவியா, கஞ்சா கருப்பு, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
S.S.குமரனின் இசையில் அமைந்த பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்ரீ மதுமிதா இணைந்து பாடிய ‘ஒரு முறை‘ பாடல் படம் வெளியான நேரத்தில் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. களவாணி ஆல்பம் மொத்தம் 7 பாடல்களை கொண்டது.
அழகிய கிராமத்தில் நகரும் கதையில் காமெடி, செண்டிமெண்ட், காதல், சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் உள்ளடக்கிய மசாலா படமாக களவாணி அமைந்தது. குறிப்பாக கஞ்சா கருப்பு மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.
விமல் ஏற்று நடித்த அறிவழகன் என்னும் அறிக்கி கதாபாத்திரம் விமலின் திரையுலக வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிக் கதாபாத்திரமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தில் இருக்கும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் களவாணி 2-ஆம் பாகத்திலும் இடம்பெற்றிருப்பர்.
இப்படம் கன்னடத்தில் கிராதகா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஓவியா தான் கதாநாயகியாக நடித்திருப்பார். கிராதகா திரைப்படம் கன்னடத்தில் வெளியான 3000-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.