Cinema News Specials Stories

தெய்வத்திருமகளின் 9 வருட கொண்டாட்டம்!!!

விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தெய்வத்திருமகள். இப்படம் வெளியாகி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகிறது. தந்தைக்கும் மகளுக்கும் நடுவில் இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் பேபி சாரா, அனுஷ்கா ஷெட்டி, அமலா பால், நாசர், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இவர்கள் மட்டுமின்றி எம்.எஸ். பாஸ்கர், மகேந்திரன், பாண்டி, ஜார்ஜ் மரியன், ரித்திகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பர்.

இப்படத்தில் மனநலம் குன்றிய கிருஷ்ணா கதாப்பாத்திரத்தில் விக்ரம் படம் பார்ப்பார்கள் மனதில் ஒரு உருக்கமான கதாபாத்திரமாக தங்கிவிட்டார். பொதுவாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் விக்ரம் வல்லவர். அந்த வகையில் கிருஷ்ணா கதாபாத்திரம் விக்ரமின் திரையுலக வாழ்வில் மிக சவாலான தத்ரூபமான கதாபாத்திரமாகவே அமைந்தது.

தன்னுடன் தன் மகளை கூட்டிச்செல்ல நினைக்கும் தந்தையாக விக்ரமும், அதற்கு வாதாட உதவும் வக்கீலாக அனுஷ்காவும், எதிர்த்தரப்பு வக்கீலாக நாசரும், குழந்தை கதாபாத்திரத்தில் பேபி சாராவும் அவரவர்கள் பங்கிற்கு கதையின் நகர்வுக்கு ஏற்ப சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர்.

தெய்வத்திருமகள் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் பாடல்களும் கதையின் ஆழத்தை பார்த்தவர்கள் மனதிற்கு எடுத்துரைக்கும் கருவியாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் சீனில் இடம்பெற்றிருக்கும் பின்னணி இசை அனைவரின் கண்களிலும் கண்ணீரை பொங்க வைத்தது என்றே கூறலாம். இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு இப்படத்தை மேலும் அழகாக காட்டி இருக்கும். இப்படம் தெலுங்குவில் “நன்னா” எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி ஜப்பானீஸ் மொழியிலும் “கமிசமா கா குரெடா முசுமே” எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.

இப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதன் விளைவாக 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படமாக தெய்வத்திருமகள் அமைந்தது. ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற தெய்வத்திருமகள் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது.

சியான் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத சூப்பர் ஹிட் படமாக தெய்வதிருமகள் அமைந்தது. இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் இணையத்தில் #9YearsofBBDeivaThirumagal என கொண்டாடி வருகின்றனர். மேலும் அனுஷ்கா திரைத்துறைக்கு அறிமுகமாகி 15 வருடங்கள் நிறைவுபெறுவதையும் அனுஷ்கா ரசிகர்கள் #15YearsofAnushkaShetty என்று கொண்டாடி வருகின்றனர்…

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.