Specials Stories

அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சி – உடலுறவு இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்!

உன்னுயிரை சுமந்த கதை
இவ் வடிவாய் உரைத்திடவே
வழி மேல் விழி வைத்து
உனக்காக காத்திருந்தேன்!

அன்பெனும் வார்த்தைக்கு
அர்த்தம் நீதானே..!
தாய்மை!

தாய்மை என்பதை ரொம்ப ஓவராக பில்டப் கொடுத்து அதை வைத்தே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்று பல முறை எழுதி இருக்கிறேன். தெற்காசிய நாடுகளில் திருமணம் ஆனதும் பாதி பெண்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட நேருகிறது. மறு பாதி கர்ப்பமானதும் துறக்கிறார்கள்.

கலவியில் ஈடுபட்டாலே கர்ப்பமாகி விடும் என்ற தொல்லையே நவீன காலத்துக்கு முன்பு வரை பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கப் போதுமானதாக இருந்தது. இப்போது கருத்தடை சாதனங்கள் பரவலாக வந்து அந்தப் பிரச்சினை பெருமளவு இல்லாமல் ஆகி விட்டது. ஆனால் குழந்தைப் பேறு என்பதை முழுவதும் தவிர்க்கவே முடியாது அல்லவா?

அதை சமாளிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று தான் வாடகைத்தாய். வேலையை துறக்கவே முடியாத அல்லது கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் உள்ள வசதியான பெண்கள் இதனை நாட முடியும். ஆனால் இதிலும் உணர்வுப்பூர்வமான பிரச்னை இருக்கிறது. காசுக்கு கர்ப்பம் தரிக்கிறாள் என்ற குற்றச்சாட்டு போக 10 மாதம் தனது வயிற்றுக்குள் வளர்த்த குழந்தையை பிரிய நேருவதும் உணர்வு ரீதியில் அந்தப் பெண்ணை பாதிக்கிறது என்ற புகார்கள் வருகின்றன.

அந்தத் தொல்லையும் விரைவில் தீர்க்கப்படப் போகிறது என்று முன்னர் எழுதி இருந்தேன். செயற்கை கருப்பையில் கருவை உருவாக்கி பிள்ளை பெறுவது பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஒரு முக்கிய தொழில் நுட்பம் சந்தைக்கு வந்திருக்கிறது. Ecto Life எனும் நிறுவனம் செயற்கை கருப்பை தொழிற்சாலை ஒன்றை நிறுவி இருக்கிறது.

இதில் ஐவிஎஃப் முறையில் கருவை உருவாக்கி இந்த செயற்கை கருப்பையில் செலுத்தி விட்டால் அந்தக் குழந்தை 9 மாதமும் அதிலேயே வளர்ந்து விடும். பத்தாம் மாதம் கருப்பை கதவைத் திறந்து குழந்தையை வெளியே எடுத்து விடலாம். சும்மா பேக்கரி அடுமனையில் இருந்து பிரட்டை வெளியே எடுப்பது போல ஜாலியாக வேலை முடிந்து விடும்.

இந்த ஒன்பது மாதமும் குழந்தையின் வளர்ச்சி விபரங்கள் மொபைல் செயலி மூலம் பெற்றோருக்கு கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் செயலியைத் திறந்து குழந்தையின் இதயத் துடிப்பை கேட்க முடியும். கால்களை ஆட்டுகிறது, உதைக்கிறது போன்ற விஷயங்களை செயலியில் வீடியோவில் பார்க்கலாம். அதனை தனது உற்றார் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பிலும் அனுப்பாலாம்.

குழந்தைக்கு ஏதேனும் பாடல்களை போட்டு அதனை கேட்க (!) வைக்க வேண்டும் எனில் அதனை அந்த மொபைல் செயலியிலேயே தேர்ந்தெடுத்து பிளே செய்தால் அந்தப் பாடல் குழந்தையின் கருப்பைக்குள் ஒலிக்கும். பெற்றோரே கூட அதை பாடி அனுப்பலாம். அல்லது புருஷ சூக்தம், காயத்திரி மந்திரம், நமாஸ் என்று எது வேண்டுமோ அதையும் அதற்கு தொடர்ந்து போட்டு வைக்கலாம்.

இவற்றை எல்லாம் விட முக்கியமாக குழந்தையின் ஆரோக்கியத்தை மற்றும் வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க இயலும். ஏதேனும் ஊனம் அல்லது மரபணு சார் கோளாறுகள் உருவாக வாய்ப்பிருந்தால் அவற்றையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்து விட இயலும். மூக்கு புடைப்பாக இருந்தால் சரி செய்து விட முடியுமா என்று கேட்கலாம்.

தொழில் நுட்ப ரீதியில் சாத்தியமே, ஆனால் இப்படி டிசைனர் பேபிகள் உருவாக்குவதற்கு எதிராக பல்வேறு அரசுகள் சட்டங்களை இயற்றி கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. அவை தளர்த்தப்பட்ட பிறகு ஹ்ரிதிக் ரோஷன் போலவோ அல்லது தீபிகா படுகோன் போலவோ குழந்தை வேண்டும் என்று கேட்டு ரெடி பண்ணிக் கொள்ளலாம்.

சரி, இதெல்லாம் பணக்காரங்களுக்குதானே என்று சிலர் அங்கலாய்க்கலாம். டிவி, மொபைல் ஃபோன் முதல் கான்சர் மருத்துவம் வரை இந்த உலகில் அனைத்து புதிய தொழில் நுட்பங்களும் பணக்கார்களுக்குதான் ஆரம்பத்தில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் நாட்பட நாட்பட இவை பரவலாகி அனைத்து மட்டத்துக்கும் கிடைத்தது. அது போலவே இந்த செயற்கை கருப்பை வசதியும் வருங்காலத்தில் பரவலாக கிடைக்கும்.

இந்தத் தொழில் நுட்பம் கருத்தரித்தலில் இருந்து பெண்களை விடுவிக்க உதவும் என்பது என் எதிர்பார்ப்பு. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இந்தத் தொழில் நுட்பம் நல்ல முதிர்ச்சி அடைந்து விடும். விலையும் பற்பல மடங்கு குறைந்து விடும். அதற்குள் பெண்களின் சமூக முன்னேற்றமும் பற்பல மடங்கு உயர்ந்து விட்டிருக்கும். அதற்குப் பின் சுயமாக கருத்தரிக்கத் தேவையே இல்லை என்ற நிலைக்குப் பெண்கள் போய் விடுவார்கள்.

காலையில் இந்த பேக்கரிகளில் பிரட் மாவை கொண்டு போய் வைத்து விட்டு டயத்துக்கு ஆபீசுக்கு போய் விடுவார்கள் என்று கணிக்கிறேன். அறிவியல் மட்டுமே நம்மைக் காப்பாற்ற வல்லது என்று பற்பல முறை குறிப்பிட்டு இருக்கிறேன். கடந்த இருநூறு ஆண்டுகளில் சமூக ஒடுக்குமுறைகளைக் களைவதிலும் அறிவியல் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறது. பெண் விடுதலைக்கும் அறிவியல் உதவி செய்திருக்கிறது.

அதன் அடுத்த கட்டம்தான் இந்த செயற்கை கருப்பை. அறிவியலின் முக்கிய மைல்கல் என்பதற்காக இதனை ஆதரிக்கிறேன். எல்லா ஊரிலும் கலாச்சாரக் காவலர்களை இது கதற விடப் போகிறது என்பதற்காக கூடுதல் உற்சாகத்துடன் விசில் அடித்து வரவேற்கிறேன்.

Article By Tamilnada Ramesh