Cinema News Specials Stories

அரை நூற்றாண்டுகள்… சிம்மாசனத்தின் சிகரத்தில் சூப்பர் ஸ்டார்!

Rajinikanth Throwback

சதுரங்க ஆட்டமாக இருந்தாலும் சரி, கேரம் விளையாட்டாக இருந்தாலும் சரி,  கருப்பு வண்ணத்திற்கு இரண்டாம் இடம் தான். விளையாட்டிலேயே இந்த நிலை என்றால், பல பாகுபாடுகள் பார்க்கின்ற மனித குலத்தில் கருப்பு என்றாலே ஒரு வெறுப்பான மனநிலையில் தான் இந்த சமூகம் இருக்கிறது.

இந்த மாதிரியான ஒரு சூழலில், நிறத்தில் கருப்பாக இருப்பவன் நிஜத்தில் ஜெயிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு மனிதன் தான் சார்ந்த துறையில் அரை நூற்றாண்டு காலம் கோலோச்சிக் கொண்டிருக்கிறான் என்றால் அது அவரின் விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் அதீத உழைப்புக்கும் கிடைத்த பரிசாகவே தோன்றுகிறது.

Rajinikanth Throwback

50 ஆண்டுகாலம் சிம்மாசனத்தின் சிகரத்தில் அமர்ந்து கொண்டிருக்கின்ற அந்த மனிதர் தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் விளங்குகின்ற ரஜினிகாந்த். 1975 இல் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த் தனது முதல் படமான “அபூர்வ ராகங்கள்” படத்தில் முதல் காட்சியில் ஒரு கேட்டை திறப்பது போல் நடித்து இருப்பார்.

அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அங்கு தனக்கான தனிப்பாதையை அவர் திறந்து கொண்டு வருகிறார் என்று. அபூர்வராகங்கள் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மிக குறுகிய நேரத்தில் வந்து போன ரஜினிகாந்த், மீண்டும் அடுத்த வருடம் கே.பாலச்சந்தர் இயக்கத்திலேயே மூன்று முடிச்சு படத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி உடன் நடித்தார். மீண்டும் 1977 இல் “அவர்கள்” படத்தில் நடித்தார்.

Rajinikanth Throwback photo

1977 வது வருடம் ரஜினிகாந்த் திரைவாழ்வில் ஒரு புதிய பாதையை காட்டியதாக அமைந்திருந்தது. அந்த வருடத்தில் நிறைய படங்கள் அவர் நடித்தார். இந்த நேரத்தில் தான் தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான கே.பாலச்சந்தர் அவர்களை தாண்டி “எஸ் பி முத்துராமன்” இயக்கத்தில் “புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் அவர் நடித்தார்.

அதே வருடம் பாரதிராஜா என்ற புது இயக்குனரால் இயக்கப்பட்ட “16 வயதினிலே” என்ற  படத்தில் பரட்டை என்ற பெயரில் நடித்த ரஜினிகாந்தின் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் பேசப்படக் கூடியதாக, நினைவு கூறப்படுவதாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து அவர் காயத்ரி, பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது என்று பல படங்களில் நடித்தார்.

ஏறக்குறைய எல்லா படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருந்த ரஜினியின்  வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது 1978 இல் இயக்குனர் மகேந்திரன் உடைய இயக்கத்தில் வெளிவந்த “முள்ளும் மலரும்” திரைப்படத்தை சொல்லலாம். அந்த படத்தில் தான் ரஜினியினுடைய முழு நடிப்பு வெளிப்படுத்தப்பட்டது.

காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினியின் நடிப்பு அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றது . இந்த சமயத்தில் தான் மீண்டும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசனும் ரஜினியும் இணைந்து நடித்தார்கள். அந்த படம் நினைத்தாலே இனிக்கும் திரைப்படம். அந்த திரைப்படம் தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம், அதற்குப் பின்னால் அவர் அவர்கள் வெவ்வேறு பாதைகளில் செல்ல ஆரம்பித்தார்கள்.

1980 இல் ரஜினிக்கு இன்னொரு முக்கியமான திரைப்படம் வந்தது அது இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளிவந்த “பில்லா” திரைப்படம். வணிக ரீதியாக மிகப்பெரிய வசூல் சாதனை செய்த பில்லா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜானி, முரட்டுக்காளை போன்ற திரைப்படங்கள் வெளிவந்தது.

பெரும் ஆக்சன் ஹீரோவாக மட்டுமல்லாமல் ரஜினியை ஒரு நகைச்சுவை நடிகராகவும் வெளிப்படுத்திய திரைப்படம் தில்லு முல்லு இந்த திரைப்படம் ரஜினியின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியது. 80-களில் ஆரம்பித்த ரஜினியின் திரைப்பட வேகம் அடுத்த பத்து ஆண்டுகளில் வசூல் ரீதியில் அவரை முன்னணி நடிகராக மாற்றி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது.

Rajinikanth Throwback

அந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த எல்லா படங்களுமே ஏறக்குறைய 100 நாட்களை கடந்து ஓடியது. இருந்தாலும் அதில் பெரும்பான்மையான படங்கள் மசாலா படங்களாகவே அமைந்திருந்தது. இந்த சமயத்தில் தான் 1991 இயக்குனர் மணிரத்னத்தின்  இயக்கத்தில் ரஜினி “தளபதி” படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒரு ஆழமான ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய ரஜினியின்  90-களுக்கு பின்னால் வந்த அத்தனை படங்களுக்கும் இது அடிப்படையாக அமைந்தது.

ஒவ்வொரு படத்திற்கும் தனி பன்ச் பஞ்ச் டயலாக் சொல்லுகின்ற யுக்தி ஏற்பட்டது. இந்த பத்தாண்டுகளில் ரஜினியின் திரை வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு உயர்ந்தது. 2005 “சந்திரமுகி” படம், அதற்கு பிறகு 2007 இல் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” படம் 2010-ல் வந்த “எந்திரன்” படம் என அனைத்தும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அந்த காலத்தில் எந்திரன் படம் பார்க்கப்பட்டது.

Rajinikanth Throwback

பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, ரவிக்குமார் போன்ற அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுடன் பணி புரிந்த ரஜினிகாந்த் . பா ரஞ்சித் இயக்கத்தில் “கபாலி”, “காலா” போன்ற படங்களிலும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் “பேட்டை’ படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் “சன் பிக்சர்ஸ்” தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வசூலில் மிகப்பெரிய சாதனையும் செய்த ஜெயிலர் படம் ரஜினியின் நடிப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. 50 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக சூப்பர் ஸ்டாராக விளங்குகின்ற ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

Rajinikanth Throwback

2000-த்தில் பத்மபூஷன் விருதும் 2016 இல் பத்ம விபூஷன் விருதும் 2019 இல் தாதா சாஹேப் பால்கே விருதும் பெற்ற ரஜினிகாந்த், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது, ஆந்திரா அரசின் நந்தி விருது உள்பட பல விருதுகளை வாங்கி இருக்கிறார். இப்படி 50 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்ற ரஜினிகாந்த் என்ற வசீகரமான ஸ்டைலான கம்பீரமான நட்சத்திரமாக ஜொலிக்கின்ற ரஜினிகாந்திற்கு இன்று பிறந்தநாள்.

இன்னும் அவர் உடல் நலத்துடனும் செழிப்புடனும் அதே வேகத்துடனும் அதே முனைப்புடனும் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று சூரியன் FM தன் வாழ்த்துக்களை காற்றலையில் தெரிவித்துக் கொள்கிறது.

Article By RJ K S Nadhan

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.