Specials Stories

தமிழ் நெஞ்சங்களின் தமிழ் தீ!!!… பாரதி(தீ)!!!…

தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே’அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது! இன்றும் பலர் பெருமையாக பாடும் கவிதை அது.

கறுப்பு கோட், தலைப்பாகைதான் இவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் , கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டாராம்  ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருக்கவேண்டும் இவருக்கு.

ஒரு முறை காந்திஜி யை சந்தித்து, “மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்” என்று இவர் சொன்னபோது, “கூட்டத்தை மறுநாளுக்கு மாற்ற முடியுமா?” என்று கேட்டாராம்  காந்தி. “அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி” என்று சொல்லிவிட்டு கெத்தாக  வெளியேறிய பாரதியை பார்த்துக்கொண்டே இருந்தாராம்  காந்தி. “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்று காந்திஜி அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டாராம்.

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் இவருக்கு தெரியும். போலீஸ் விசாரணையின் போது, ‘நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?’ என்று ஆச்சர்யப்பட்டாராம் அந்த அதிகாரி. அந்தளவுக்கு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருக்கும் இவரது உச்சரிப்பு.

ஒருமுறை நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை இவரை பாடச் சொல்லி கேட்டபோது முடியாது என மறுத்துவிட்டாராம் முதலில், அதன்பின் நடு நிசியில் அவரை எழுப்பி மூன்று மணி நேரம் பாடி அசத்தினாராம். இப்படி மற்றவர் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத விஷயங்களை செய்து தனது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார் அவர்கள். காக்கை குருவி எங்கள் சாதி என பாடி காக்கை குருவிகளையும் கூட கொண்டாடி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என உணர்த்தியவர்.

மற்றவர்களின் கேலி சொற்களுக்கும் கிண்டல் பார்வைகளுக்கும் அஞ்சி, கனவுகளை தொலைத்து சாதிக்க தயங்கும் பலருக்கு உத்வேகம் குடுக்க இவரது ” நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை ” பாடல் ஒன்றே போதும். சுதந்திர வேட்கையையும் ,பெண் விடுதலையையும், பெண் சுதந்திரத்தையும், பல நெஞ்சங்களில் விதைத்த இந்த பாரதி என்னும் வேள்வி தீ… தமிழ் இருக்கும் வரை தமிழ் நெஞ்சங்களில் அணையாது நிலைத்திருக்கும்.

Article By RJ Dharshini