Specials Stories

பாட்டன் பாரதி

சாதிகள், மதங்கள் என்று மனிதர்களுக்குள்ளே வேற்றுமை பார்த்த உலகில் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று அனைத்து உயிர்களையும் ஒன்றாக நேசித்த மகா கவி ‘பாட்டன் பாரதி’. வெள்ளையனின் வெறியாட்டத்தை கண்டு பயந்த மக்களை ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று உரக்க சொல்லி உணர்வுகளை தட்டி எழுப்பிய முண்டாசு கவிஞன்..,

மீசையில் திரிசூலம் ஏந்தி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பெண்ணியம் பேசி கண்ணியம் காத்த எங்கள் கற்பூர சொல்லோன். 5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், 7 வயது முதலே கவிதையால் ஈர்க்கப்பட்டார். பாரதியாருக்கு 11 வயது இருக்கும்போது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து இவர் பெயர் சுப்ரமணிய பாரதியார் என்றாயிற்று.

திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9 ஆம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞர்கள் மற்றும் பண்டிதர்களுடன் சொற்போரில் சுதந்திரமாக ஈடுபட்டார். இதன் காரணமாக அவரின் தமிழ் புலமை மேலும் அதிகரித்தது. 1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி பாரதியாரின் வாழ்நாளில் மறக்க முடியாத தேதி.14 வயது மட்டுமே நிறைவடைந்த பாரதியாருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாள் உடன் நடந்தேறியது சிறார் திருமணம். பாரதியார் தன் தந்தையாரிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றைக் கற்றார்.

16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன்பிறகு சில காலம் வறுமையில் வாடி தவித்தார். அந்த சமயங்களில் பாரதிக்கு பசிக்கும், பாசத்திற்கும் தமிழே இருந்தது. பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்தார். இது மட்டுமல்லாமல் அவர் வடமொழி, இந்தி, பிரெஞ்சு ஆகிய பல மொழிகளையும் கற்றார். மொத்தமாக பாரதியார் 14 மொழிகள் கற்றறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளுக்கு பிறகு காசியிலிருந்து தமிழகம் திரும்பிய பாரதியார் எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் – மதுரையிலிருந்த விவேகபானு என்னும் நாளேட்டில் வெளிவந்தது. பாரதியார் 1905-இல் சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கி அதில் வந்தே மாதரம்  என்ற பாடலை தமிழில் மொழி பெயர்த்தார். சுப்பிரமணிய பாரதியாருக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை உடன் நட்பு ஏற்பட்டது.

1906-இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பாரதியார் அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார் அவரை தம் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார். தன்னுடைய பல பத்திரிக்கைகளில் இந்திய சுதந்திர முழக்கத்தை தனது எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தினார். வறுமையில் சிலகாலம் வாழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1919-ல் ராஜாஜியின் வீட்டிற்கு ஒருமுறை சென்ற போது அங்கிருந்த மகாத்மா காந்தியை சந்தித்தார்.

இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி, மகாகவி பாரதியார் சந்தித்த நிகழ்வு அதுவே முதலும் கடைசியும் ஆகும். விடுதலை கிடைக்கும் போது தாம் இருக்கமாட்டோம் என்று உணர்ந்த பாரதி என்னும் தீர்க்கதரிசி  1921-இல் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று முழக்கமிட்டார்.

தன் வாழ்நாள் முழுவதும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக, எழுத்துகளால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக, பாரதியார் திகழ்ந்தார்.பாரதியார் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்று எண்ணாமல்.., இன்றும் நம் நினைவுவில், ஒரு பெண்ணின் முதல் வெற்றியில், ஒரு சமத்துவ சிந்தனையில், மானுட ஒற்றுமையில், அவரின் அழிவில்லாத அமுத பாடல்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

Article By Sethu Madhavan