Specials Stories

ஜாலியன்வாலா பாக் படுகொலை : 21 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த ’உதம் சிங்’

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று இதே நேரத்தில் பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் திடலில் ஆங்கிலேய கொடுங்கோல் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தனர். கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என வயது வித்தியாசமே இன்றி பல்லாயிரக்கணக்கானோர் ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பெருங்கனவோடு அங்கு கூடியிருந்தனர்.

ஆனால், ஆங்கில அரசுக்கோ வேறு கனவு இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது இந்திய சுதந்திர போராட்டத்தை கொலைநடுங்க செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தது. அதன் படி நான்கு பக்கமும் பெரும் சுவர்களால் ஆன ஒரே ஒரு வாசல் மட்டுமே கொண்ட அந்த ஜாலியன்வாலா பாக் திடலில் அமைதியாக நடந்துகொண்டிருந்த போராட்ட உரைகளுக்கு மத்தியில் ஆங்கிலேயரின் குண்டு மழை பொழிந்தது.

ஆங்கில படையை தலைமை தாங்கி வந்த ஜெனரல் டயர் பாரபட்சமின்றி அங்கிருந்த போராட்டக்காரர்களை நோக்கி சுட உத்தரவிட்டார். ஜெனரல் டயர் உத்தரவிட்ட அடுத்த மாத்திரமே ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகுழல்களின் ஓட்டையில் இருந்து 1600-க்கும் அதிகமான குண்டுகள் சுதந்திர போராட்ட வீரர்களின் நெஞ்சை பிளந்தது. பலர் தப்பிக்க வழியின்றி அங்கிருந்த கிணற்றில் விழுந்து இறந்தனர்.

சிலர் கூட்டத்தில் சிக்கி நசுங்கி செத்தனர். ஆயிரக்கணக்கான சுந்திர போராட்ட வீரர்கள் தாய் நாட்டுக்காக ஒரே நேரத்தில் உயிர்நீத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பேசியிருந்த ஜெனரல் டயர், நான் அங்கு வெறும் கூட்டத்தை கலைக்க செல்லவில்லை. இனி ஒருவர் ஆங்கில அரசை எதிர்க்க வேண்டுமென்றால் முதலில் இந்த சம்பவம்தான் மனதில் தோன்ற வேண்டுமென்று ஒரு பயத்தை விதைக்க சென்றேன்.

என்னிடம் மட்டும் படைகள் இன்னும் அதிகமாக இருந்திருந்தால் இன்னும் அதிகமான கொலைகள் விழுந்திருக்கும் என்றும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சொன்னார். சத்யாகிரக போராட்டமும், பல்வேறு ஆங்கில சட்டங்களை எதிர்த்த நாடு தழுவிய போராட்டங்களும் துளிர் விட்டு கொதித்துக் கொண்டிருந்த காலம் அது. இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது என்று ஆங்கில அரசாங்கம் செய்த பெரும் போராட்ட அடக்குமுறை சம்பவம்தான் இது.

ஆனால், அவர்களுக்கு இந்தியாவை பற்றி சரியாக தெரிந்திருக்கவில்லை. அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. படுகொலைகளால் போராட்டத்தை தடுத்து விட முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், கொலைக்களத்தின் ரத்தம் எரிவாயுவை போல் போராட்ட தீயை காட்டுத்தீயாக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த படுகொலையில் இருந்து இரண்டு துடிப்புமிக்க போராளிகள் உருவானார்கள்.

இந்த சம்பவம் நடந்த உடனே அங்கே வந்து அங்கிருந்த ரத்தம் தோய்ந்த மண்ணை அள்ளி தன்னிடம் வைத்துக் கொண்டு இந்திய நாட்டிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக உறுதி கொண்டான் 12வயது சிறுவன் ஒருவன். அவன்தான் பின்னாளில் ஆங்கில அரசே பார்த்து பயந்து நடுங்கி அவசர அவசரமாய் தூக்கிலிட்ட 23 வயது புரட்சியாளர் பகத்சிங்.

மற்றுமொரு சிறுவன் இந்தப் படுகொலைக்கு பழிதீர்க்க முடிவு செய்து சம்பவம் நடந்த நாளில் இருந்து 20 வருடம் கழித்து லண்டனில் வைத்து ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற உத்தம்சிங். இவருக்கு ஜாலியன்வாலா பாக் நினைவு மண்டபத்தில் சிலையும் கூட வைக்கப்பட்டுள்ளது. 1919 இல் ஜாலியன்வாலா பாக் கொடூரம் நடந்தபோது,​​ ஷாஹீத் உதம் சிங்கிற்கு 20 வயது தான் ஆகியிருந்தது.

ஆனால், தன் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைக்கு ஜெனரல் டயரை நிச்சயமாக தண்டிப்பேன் என்று உதம் சிங் சத்தியம் செய்தார். மைக்கேல் டயரை பழிவாங்க துடித்த உதம் சிங் 1934 இல் லண்டனுக்குச் சென்றார். ஒரு காரையும், ரிவால்வரையும் வாங்கி தன்னை தயார்படுத்திக் கொண்டு, சரியான வாய்ப்புக்காக காத்திருக்கத் தொடங்கினார் உதம் சிங். அவர், ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த வாய்ப்பு 1940 மார்ச் 13 அன்று வாய்த்தது.

சம்பவ தினத்தன்று உதம் சிங் ரிவால்வரை ஒரு ஒரு புத்தகத்திற்குள் பதுக்கி வைத்து, காக்ஸ்டன் ஹாலுக்குள் நுழைந்தார், அங்கு மைக்கேல் டயர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஜாலியன்வாலா பாக்கில் கிடைத்த வாய்ப்பைப் போல மீண்டும் ஒரு வாய்ப்புகிடைத்தால், அதை நிச்சயமாக செய்வேன் என்று டயர் சொன்னார். ஜெனரல் டயர் தனது உரையை முடிப்பதற்கு முன்னதாக மக்களுக்குள் கலந்து அமர்ந்திருந்த உதம் சிங் எழுந்தார்.

ஜாலியன்வாலா பாக்-கில் பலரின் உயிரைக் குடித்த குற்றவாளி டயரின் உயிரைக் குடித்து, இந்திய மக்களின் மனதில் பால் வார்த்தார். 21 ஆண்டு காலமாக மனதை பாடாய் படுத்தி உறங்கவிடாமல் செய்து கொண்டிருந்த சபதத்தை நிறைவேற்றிய பின்னர், உதம் சிங் தப்பி ஓட எந்தவித முயற்சியும் செய்யவில்லை… மாறாக, தன்னை போலீசிடம் ஒப்படைத்தார்.

லண்டன் நீதிமன்றத்தில், வீரன் உதம் சிங் அன்னை இந்தியா மீதான தனது முழு மரியாதையையும் வெளிப்படுத்தினார். இந்திய விடுதலைப்போராட்டத்தில் மிகப்பெரும் வரலாற்று துயரம் எனப் பேசப்படுகிறது ஜாலியன் வாலாபாக் படுகொலை. 100 ஆண்டுகளுக்குப் பின் 2019-ல் பிரிட்டன் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Article By Smily Vijay