Cinema News Specials Stories

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி!

“முகமது குட்டி பானா பிரம்பில் இஸ்மாயில்” இந்த பெயரை சொன்னால் பெரும்பாலவன வர்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் “மம்முட்டி “என்று சொன்னால் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளா சினிமா ரசிகர்களிடம் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும்.

70’களின் ஆரம்பத்திலிருந்து 80’களின் தொடக்கம் வரை, இந்திய சினிமாவில் புதிய தலைமுறையின் எழுச்சி ஏற்பட்டது. புதிய இயக்குனர்கள், புதிய இசை அமைப்பாளர்கள், புதிய ஒளிப்பதிவாளர்கள், இளம் நடிகர்கள், புதிய கதைக்களங்கள் என எல்லாவற்றிலும் புதுமையும் இளமையும் புகுந்து ஒரு புது பாய்ச்சலோடு இந்திய சினிமா புதிய பாதையில் நடை போடத் தொடங்கியது.

Image

இந்தியில் அமிதாப் பச்சன், தமிழில் ரஜினி ,கமல், தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் விஷ்ணுவர்தன் என எல்லா மொழி திரைப்படங்களிலும் புதிய இளம் நடிகர்கள் வளர்ந்த காலத்தில் மலையாள சினிமாவிலும் மம்முட்டி மோகன்லால் போன்ற இளம் நடிகர்கள் உருவானார்கள்.

1971 ஆம் ஆண்டு “அனுபவங்கள் பாலிச்சகல்” என்ற படம் மூலம் அறிமுகமான மம்முட்டி, 1979-ல் தேவலோகம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அது வெளிவராமலேயே போய்விட்டது. அதற்கு அடுத்து 1981 ஆம் ஆண்டு “அஹிம்சா” என்ற படத்தில் நடித்தார் மம்முட்டி. அந்த படம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான கேரள மாநில விருதைப் பெற்றுத் தந்தது.

Image

அதற்குப் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் வணிகரீதியில் பெரும் வெற்றி பெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் மம்முட்டி மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி.

‘தமிழிலும் படங்கள் நடித்தாலும் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து மம்முட்டி நடித்த “தளபதி” படம் அவரை தமிழ் ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சென்றது. அடிப்படையில் வழக்கறிஞரான மம்முட்டி, நல்ல எழுத்தாளராகவும் தொழில் முனைவோர் ஆகவும் படைப்பாளியாகவும் “ஸ்ட்ரீட் இந்தியா அறக்கட்டளையின்” நல்லெண்ண தூதுவராகவும் விளங்குகிறார்.

Image

தனது 50 ஆண்டு கால திரை வாழ்க்கையில் மம்முட்டி புரிந்த சாதனைகளும் வாங்கிய விருதுகளும் ஏராளம். இதுவரை 400 படங்களுக்கு மேல் நடித்து 3 தேசிய விருதுகள், 7 கேரள மாநில விருதுகள், 13 பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கியுள்ள மம்முட்டி , 1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருதையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் மம்முட்டி என்ற கலைஞன் பிறந்த நாள் செப்டம்பர் 7. இந்த நேரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சூரியன் FM தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும், ஓணம் திருநாள் வாழ்த்துக்களையும் காற்றலையில் தூது அனுப்புகிறது.

Article By RJ.K.S.Nathan