Specials Stories

தடைகளை தாண்டிய தங்கவேலு மாரியப்பன் !!

எப்பொழுதும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது இந்தியாவிலிருந்து ஒருவராவது தங்கம் வாங்கமாட்டார்களா என ஏங்கித்தவிப்போம், அப்படி 2016ல் எதிர்பார்த்து காத்திருக்கையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பெரியவடக்கம்பட்டியிலிருந்து பிரேசில் சென்று அந்த சாதனையை படைத்தான் ஒரு தங்கத்தமிழன், மாரியப்பன் தங்கவேலு.

உடல் நலிவுற்ற மாற்று திறனாளிகளுக்கு பிரேசிலில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் உயரம் தாண்டுதலில் பங்குபெற்று பரபரப்பான இறுதிப்போட்டியில் தன் நலிவுற்ற கால்களால் தாங்கி தாங்கி ஓடி ஓங்கி எழுந்து ஒரே மூச்சாக 1.89 Mtr உயரத்தை தாண்டி குதித்தார் மாரியப்பன். சேலம் தங்கவேலு பெற்ற தங்கம், நாட்டிற்க்கே தங்கத்தை பெற்றுத்தந்தது.

உலகமே மாரியப்பனை உச்சிமுகர்ந்து பாராட்டி கொண்டாடி மகிழ்கிறது, பணமழையும் பரிசு மழையும் வந்து சேர்கிறது, அடுத்த வருடமே பத்ம ஸ்ரீ விருது கிடைக்கிறது. அவ்வளவு ஏன் போன 2020 வருடம் கூட விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் உயரிய விருதான கேல் ரத்தனா விருதும் கிடைக்கிறது.
இதுவனைத்தும் ஒரே பொழுதில் அந்த 1.89 Mtr உயரத்தை கடந்ததால் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, பல தடைகளையும் துயரங்களையும். பல இன்னலனுபவித்து தான் கடந்திருக்கின்றார் மாரியப்பன்.

பிறந்தது சேலம் மாவட்டத்தின் ஒரு மூலையில் மலைக்கிராமம், ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரும் பேருந்து, அந்த பேருந்தும் பெருஞ்சோதனையை தந்தது மாரியப்பனுக்கு. தன் 5 வயதில் சாலையோரத்தில் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் மீது பேருந்து மோதி வலது கால் பாதத்தை முழுவதுமாக இழந்திருக்கின்றார். பின்னர் தான் தெரிந்துள்ளது, அந்த பேருந்தை மது போதையில் ஒட்டி வந்திருக்கிறார் ஓட்டுநர்.

சில வருடங்களிலேயே தன் தந்தையையும் இழந்திருக்கின்றார். அழையா விருந்தாளியாக வறுமை வந்து ஒட்டிக்கொள்கிறது வீட்டில். தன் உறவினர்கள் யாரையும் எதிர்பாராமல் மாரியப்பனின் அம்மா, கிடைத்த வேலைகளுக்கு எல்லாம் செல்கிறார். செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்றிருக்கின்றார், பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் வீட்டினருகில் காய்கனிகள் விற்று அதை வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். தான் என்ன கஷ்டப்பட்ட போதும் தன் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கின்றார்.

பள்ளிக்கு செல்லும் மாரியப்பனுக்கோ கல்வியை காட்டிலும் விளையாட்டின் மீதே அதீத ஆர்வம் ஏற்படுகிறது, கால் ஊனமுற்று இருப்பதால் அவரை தன் நண்பர்களும் சேர்ந்து விளையாட அனுமதிக்கவில்லை. பல நாட்களாக தன் நண்பர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்து ஏங்கி தவித்துள்ளார். அப்படி ஒரு நாள் பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டி நடந்திருக்கின்றது, தன் நண்பர்கள் விளையாடுவதை பொறுமையாக வேடிக்கை பார்த்துவிட்டு அவர்கள் சென்ற பின் யாருக்கும் தெரியாமல் இவர் தாங்கி தாங்கி ஓடி வந்து வெகு அற்புதமாக உயரம் தாண்டியிருக்கார், அதனை கவனித்த அவர் உடற்கல்வி ஆசிரியர் ஆச்சரியத்தில் மிரண்டு போயுள்ளார்.

பின்னர் மாரியப்பனுக்கு முறையான பயிற்சிகள் கொடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற செய்கின்றார், மாரியப்பனும் பரிசுகளை அள்ளி குவித்துள்ளார். வேடிக்கை என்னவென்றால் தமிழ்நாட்டிற்குள் அவர் பங்கு பெற்ற போட்டிகள் அனைத்தும் மாற்று திறனாளிகளுக்கான போட்டிகளில் அல்ல, உடல் ஊனம் கொள்ளாத சாதாரண பிரிவில், வீரர்களோடு போட்டியிட்டு வென்று அசத்தியிருக்கிறார் மாரியப்பன்.

அதன் பிறகு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் திரு இளம்பரிதி என்பவரும் உதவியிருக்கிறார், அதன் பின் விளையாட்டிற்கு Coach ஆக மட்டுமல்ல தனக்கும் ஒரு மானசீக குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் பெங்களூருவை சேர்ந்த சத்தியநாராயணன் என்று பல இடங்களில் சொல்லியிருக்கின்றார் மாரியப்பன். நம்மில் பலர் உடலில் ஊனமின்றி, மனதால் ஊனமுற்று தவிக்கின்றோம், மாரியப்பனுக்கு நன்றி சொல்லி உடைத்தெறிவோம் தடைகளை. தங்கத்தமிழன் மாரியப்பனுக்கு இன்று பிறந்த நாள், சூரியன் FM-ன் அன்பு வாழ்த்துக்கள்.

Article by Roopan Kanna Puyalraj