Cinema News Specials Stories

என்றென்றும் நம் நினைவில் ‘கேப்டன் விஜயகாந்த்’

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று நம்மை விட்டு பிரிந்துள்ளார். விஜயகாந்த் அவர்களின் மறைவை ஏற்கமுடியாமல் அவரது கட்சித் தொண்டர்களும், அவரது ரசிகர்களும், அவரால் வாழ்ந்து வரும் சினிமா நட்சத்திரங்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விஜயகாந்த் மீது மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், உடன் பணியாற்றிய நட்சத்திரங்கள் இவ்வளவு பேரும் பேரன்பு கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? எதனால் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்? விஜயகாந்த் பற்றி ஆரம்பத்திலிருந்து இப்போது பார்ப்போம்.

1952 ஆகஸ்ட் 25 ஆம் தேதி அருப்புக்கோட்டை அருகில் உள்ள இராமானுசபுரம் எனும் ஊரில் விஜயராஜ் பிறந்தார். பின்னர் குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்ததால் மதுரையில் வளர்ந்தார். சினிமாவின் மீதான ஆர்வத்தால் நடிகனாகும் எண்ணத்தோடு சென்னை வந்து வாய்ப்பு தேடி அலைந்தார். ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விஜயராஜ்… ’விஜயகாந்த்’ என தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் சில படங்கள் சரியாக அமையாத நிலையில் விஜயகாந்திற்கு ’சட்டம் ஒரு இருட்டறை’ எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதுதான் விஜயகாந்தின் முதல் வெற்றி. அங்கு தொடங்கிய வெற்றி தான் இன்று வரை அவரை பின் தொடர்கிறது. கருப்பு தங்கம் என தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமானார் விஜயகாந்த்.

உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தன்னுடன் பணி செய்பவர்களிடம் எந்த வித்தியாசமும் இன்றி பழகுவார். யாருக்காவது கஷ்டம் என்றால் முதல் ஆளாக உதவக் கூடியவர். அதற்கு இன்று தமிழ் சினிமாவில் இருக்கக் கூடிய பல நடிகர்கள் சாட்சியாக உள்ளனர். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தான் விஜயகாந்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்தது என்பதால் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.

எனவே விஜய் குழந்தை நட்சத்திரமாக விஜயகாந்த் படங்களில் வலம் வந்தார். விஜயகாந்தின் வெற்றி, குடும்பம், வசந்த ராகம் மற்றும் சட்டம் ஒரு விளையாட்டு ஆகிய படங்களில் விஜய் நடித்துள்ளார். இதுமட்டுமல்ல விஜய் கதாநாயகனாக அறிமுகமான பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்த நன்றி காரணமாக செந்தூரப்பாண்டி படத்தில் சம்பளமின்றி நடித்துக் கொடுத்தார். இது விஜய்க்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து வெற்றிநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். அவருடைய 100வது திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தில் தான் விஜயகாந்த்… கேப்டன் விஜயகாந்த் ஆக மாறினார். அன்றிலிருந்து இன்று வரை நாமும் கேப்டன் என்றே அழைத்து வருகிறோம். சாதாரணமாகவே உடன் இருப்பவர்கள் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட கேப்டன் விஜயகாந்த்,

அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்ற விரும்பினார். 2002 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படம் அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தது. 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். 2006 தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினரானார். படிப்படியாக கட்சியை வளர்த்து 2011 ஆம் ஆண்டு தேர்தலில் பல இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி தலைவரானார்.

சினிமாவில் மட்டும் ஆக்‌ஷன் ஹீரோவாக இல்லாமல் அரசியலிலும் பயமின்றி எதிர்க்கட்சிகளை தனது துணிச்சல் மிக்க பேச்சால் துவம்சம் செய்தார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரது உடல்நிலை மோசமானது. சிங்கப்பூரில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இந்தியா திரும்பினார். அதன்பிறகு அவரால் சரிவர பேச முடியாமல், நடக்க முடியாமல் போனது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி கடும் தோல்வியை சந்தித்தது.

அன்று முதல் இன்று வரை பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டபடி மோசமான உடல்நிலையை எதிர்த்து போராடி வந்த விஜயகாந்த்… சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமம் ஏற்பட்ட நிலையில் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிமோனியா மற்றும் பல்வேறு இணை நோய்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் அவர்களின் உயிர் பிரிந்தது.

மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் அவர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் இந்த உலகிலிருந்து மறைந்தாலும் அவர் செய்த உதவிகளும், அவரின் நற்செயல்களும் அவரை என்றென்றும் நம் நினைவில் நிலைத்திருக்க வைக்கும்.

Article By MaNo