Specials Stories

சபரிமலைல கோவில் உருவானப்ப வைக்கப்பட்ட சிலை இப்ப இல்லையா?

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற ஒரு முக்கிய ஸ்தலமாகும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் வழக்கமாகும்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உள்ள சிலை கோவில் உருவான போது வைக்கப்பட்ட சிலை இல்லையாம். சாஸ்தாவின் சிலையும், கோவிலும் முற்றிலும் சிதிலமடைந்து விட்டதாம்! சிலையும் கோவிலும் முற்றிலும் பின்பு தயார் செய்து வைக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா?

மகிஷியை வதம் செய்ய ஹரியும் ஹரனும் சேர்ந்து படைத்த சக்தியான சுவாமி ஐயப்பன் வரலாறு, நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. பந்தள மகாராஜாவின் மனைவி சூழ்ச்சியறிந்து காட்டிற்கு சென்ற ஐயப்பன் மகிஷியை வதம் செய்ததோடு, தன் தந்தையின் விருப்பத்தினால் சபரி மலையில் குடிகொண்டிருக்கிறார். சக்தியின் ஸ்வரூபான சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சரிய விரதத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

950 ஆம் ஆண்டு வழக்கம் போல மாதாந்திர பூஜைக்கு பிறகு மே 20 ஆம் தேதி நடை சாற்றப்பட்டது. அடுத்த மாதாந்திர பூஜைக்காக ஜூன் 16 ஆம் தேதி கோவில் திறக்கப்பட்ட போது, அனைவரும் மிகப்பெரிய பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆம், சபரிமலை கோவில் முழுவதும் எரிந்து நாசமாகி கிடந்ததாம். மூலஸ்தானமும் அழிக்கப்பட்டு உள்ளே உள்ள சுவாமி ஐயப்பன் சிலை தூள் தூளாக நொறுக்கப்பட்டு கிடந்ததாம். சமூக விரோதிகளால் ஐயப்பன் கோவில் தரைமட்டமாக்கப்பட்டது என்று பின்னர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோவிலும் சிலையும் அழிக்கப்பட்ட பின்னர், கோவிலை மறு சீரமைத்தனர். தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு, மறைந்த முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தை பி.டி.ராஜன் தமிழகத்தில் சிலை வடிவமைக்க செய்துள்ளார். கும்பகோணம் அருக உள்ள சுவாமி மலையை சார்ந்த சிற்பக்கலைஞரான ராமசாமி ஸ்தபதி வடித்து தந்த ஐயப்பன் சிலைதான் இப்போது வழிபாட்டில் உள்ள சிலையாகும். பரசுராமர் வடிவமைத்த சிலையின் துகள்கள் ஒன்றாக்கப்பட்டு கோவில் மணியாக கொடிமரம் அருகே காட்சி தருகிறது.

1894 ஆம் ஆண்டிலேயே சபரிமலைக்கு செல்வோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 15,000 என்கிற அளவில் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் முறையான ஆதாரத்துடன் இருக்கிறது. இத்தனைக்கும் அப்போது தென் இந்தியாவுடைய மக்கள் தொகை 5 கோடிக்கும் கீழ்தான் இருந்தது. 1940-களில் தமிழ்நாட்டில், ‘நவாப்’ ராஜ மாணிக்கம் என்பவர் முதன்முதலாக சபரிமலை பற்றியும் சுவாமி ஐயப்பன் பற்றியும் நாடகங்களை அரங்கேற்றி பலருக்கும் சபரிமலையையும் அய்யப்பனையும் அறிமுகப்படுத்தினார்.

நாடக மேடையில பல வித்தியாசமான முயற்சிகளை செய்தவர். நாடகத்தில் சுவாமி ஐயப்பன் 12 வயது பாலகனாக புலிப்பால் எடுக்க காட்டுக்குள் போய்விட்டு வருவார். அப்படி வரும்போது புலி மீது உட்கார்ந்த நிலையில் திரும்பி வருவார். இதற்கு நிஜமான புலியையும், புலிக்குட்டிகளையும் பயன்படுத்தினார். இதனாலேயே இந்த நாடகத்தை பெரும்திரளான மக்கள் வந்து பார்த்தனர்.

மாலை அணிந்து தீவிரமாக விரதமிருப்பதே இந்த யாத்திரையை எதிர்கொள்வதற்காகத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆம்! சபரிமலைக்கு மாலையிட்டு இருக்கும்போது காலணிகள் அணியக்கூடாது, வெறுங்காலில் தான் நடக்க வேண்டும், குளிர்ந்த நீரில் இரு வேளையும் குளிக்க வேண்டும், வெறும் தரையில் தான் உறங்க வேண்டும், காய்கறிகள் தான் சாப்பிட வேண்டும். ஆனால் இவையனைத்தும் சபரிமலைக்கு செல்வதற்கான ஒரு ஒத்திகைதான் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு சென்று தர்ம சாஸ்தாவை தரிசனம் செய்வது தான் விசேஷம். கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கையொட்டி தொடர்ந்து 48 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் மற்ற மாதங்களிலும் சபரிமலைக்கு சென்று அய்யன் ஐயப்பனை தரிசனம் செய்யலாம்

Article By Smily Vijay