Specials Stories

ஷுப்மன் கில் பத்தின இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

மூன்று வயதிலிருந்தே கிரிக்கெட் வீரராக வேண்டும் என கனவு கண்டு அதை நிஜமாக்கியவர் தான் இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில். செப்டம்பர் 8, 1999 அன்று பஞ்சாபில் உள்ள ஃபசில்காவில் பிறந்தார். அவரது தந்தை லக்விந்தர் சிங் ஒரு விவசாயி மற்றும் அவரது தாயார் கிராத் கில் ஒரு இல்லத்தரசி. சுப்மான் கில்லுக்கு ஷாஹீன் கில் என்ற மூத்த சகோதரி இருக்கிறார். பஞ்சாபில் உள்ள மானவ் மங்கல் ஸ்மார்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

2016-17 இல் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2017-இல் விதர்பா அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக லிஸ்ட் ஏ வில் அறிமுகமானார். அடுத்து 2017–18 இல் நடைபெற்ற ரஞ்சி டிராபி 2017 இல் பஞ்சாப் அணிக்காக தந்து அறிமுக ஆட்டத்தை தொடங்கினார். அதே ஆண்டில், தனது இரண்டாவது போட்டியில், பெங்கால் அணிக்கு எதிராக முதல் சதத்தை அடித்தார் கில்.

2017 ஆம் ஆண்டில், தியோதர் டிராபியில் கேப்டனாக ஒரு அணியை வழிநடத்திய இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். 2018-19 ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் முதல் தர போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனாக புகழ் பெற்றார். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற Under 19 World Cup இல் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அதே 2018 இல், IPL இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் ரூ 1.8 கோடிக்கு வாங்கப்பட்டார் கில். 2018 முதல் 2021 வரை KKR க்காக விளையாடினார். கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி 8 கோடி ரூபாய்க்கு ஷுப்மன் கில்லை வாங்கியது. குஜராத்தின் முதல் ஐபிஎல் கோப்பையை அவர்களின் முதல் சீசனில் உயர்த்த அவர் உதவினார்.

ஜனவரி 2019 இல், நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டு ஆகஸ்டில், முதல்தர போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். டிசம்பர் 2020 இல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவுக்காக களமிறங்கினார்,

கபாவில் நடந்த நான்காவது டெஸ்டில் ஷுப்மன் கில் 91 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 2023 ஜனவரியில், இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதே மாதத்தில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தார். பிப்ரவரி 2023 இல், அவர் நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் T20 சதத்தையும் அடித்தார்.

2023 உலகக்கோப்பை போட்டித் தொடரிலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார். கோலியின் சாதனையை கில் முறியடிப்பார் என இப்போதே பலரும் கூறி வருகின்றனர். வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பெரும்பாலான வெற்றிகளிலும் ஷுப்மன் கில்லின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

Article By MaNo