Specials Stories

ஹிட்மேன் ரோஹித் ஷர்மாவின் சாதனைகள்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா பற்றிய சில விஷயங்கள் மற்றும் சாதனைகளை பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம். ரோஜித் ஷர்மா 1987 ஏப்ரல் 30 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ரோஹித் குருநாத் ஷர்மா. இவரது தந்தையின் பெயர் குருநாத் ஷர்மா, தாயின் பெயர் பூர்ணிமா ஷர்மா. ரோஹித்துக்கு விஷால் சர்மா எனும் தம்பி ஒருவர் இருக்கிறார்.

ரோஹித் ஷர்மா இந்திய அணியின் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார். டைமிங், சிக்ஸர் அடிக்கும் திறன், நேர்த்தியான விளையாட்டு மற்றும் தலைமைப் பண்பு ஆகியவை ரோஹித் ஷர்மாவின் சிறப்பம்சங்கள். 20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். நீண்ட தொலைவுக்கு சிக்ஸர்களை அடிக்கும் திறமை மற்றும் மின்னல் வேகத்தில் ஸ்கோர் செய்யும் திறன் தான் இதற்கான காரணம்.

ரோஹித் ஷர்மா ஜூன் 2007 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் நடுத்தர-வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார், 2013 இல் ஓபனிங் பேட்ஸ்மேனாக தனது இடத்தை தக்க வைத்தார். 2014 இல் இலங்கைக்கு எதிராக அவர் பெற்ற 264 ரன்கள் உட்பட ஒரு நாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். தனி ஒருவனாக 264 ரன்கள் அடித்து ஒரு நாள் சர்வதேச (ODI) போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் குவித்த தனிநபர் எனும் உலக சாதனையை படைத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து, அணியை வழிநடத்தி 5 ஐபிஎல் கோப்பைகளை தன்வசப்படுத்தியுள்ளார், அவரை மிகவும் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக மாற்றிக் கொண்டார். ரோஹித் ஷர்மா அமைதியான மற்றும் ஆளுமையான கேப்டன் என பெயர் பெற்றவர். கிரிக்கெட் ரசிகர்களால் “ஹிட்மேன்” என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் ரோஹித் ஷர்மாவின் அதிரடி ஆட்டம் தான்.

ரோஹித் ஷர்மாவுக்கு 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மட்டுமே.

2023 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அரையிறுதி வரை தோல்வியே இன்றி தொடர் வெற்றிகளோடு இந்திய அணியை வழி நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர். இப்படி பல சாதனைகளுக்கு சொந்தமான ரோஹித் ஷர்மா இனியும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.

Article By MaNo