Specials Stories

விராட் கோலி பத்தின இந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 1988 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி புது டெல்லியில் பிறந்தார். அவரது தந்தை பிரேம் கோஹ்லி ஒரு குற்றவியல் வழக்கறிஞர். அவரது தாய் பெயர் சரோஜ் கோலி. அவருக்கு விகாஸ் என்ற அண்ணனும், பாவனா என்ற அக்காவும் உள்ளனர். ஆகஸ்ட் 2008 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் விராட் கோலி.

அன்று முதல் சிறப்பாக விளையாடி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார் விராட் கோலி. இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார். வழக்கமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது இடத்தில் பேட்டிங் செய்வார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 8000, 9000, 10000, 11000 மற்றும் 12000 ரன்களை எட்டிய கிரிக்கெட் வீரர் இவர்தான்.

2013 இல் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2018 இல் இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017 டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்தார் கோலி. இவர்களுக்கு வாமிகா என்ற மகள் உள்ளார்.

கோஹ்லி பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். உலகிலேயே சேஸிங்கில் அதிக சதம் அடித்தவர் விராட் கோலி. இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி அறியப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.

பலமுறை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக முதலிடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு அடையாளமாக பார்க்கப்படுகிறார். உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு.

2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தனது 50 வது சதத்தை அடித்து, 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்து உலகளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பலமுறை ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். இப்படி பல சாதனைகளுக்கு சொந்தமான விராட் கோலி உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இளம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கிறார்.

Article By MaNo