Specials Stories

என்றென்றும் ஸ்ரீ தேவி !!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 57 வது பிறந்தநாள் இன்று. குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி.

விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்த இவர் தனது 4 வயது முதலே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். 1967 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடித்து வெளிவந்த கந்தன் கருணை திரைப்படத்தில் சிறுவயது கடவுளாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இப்படத்தில் இவரது தெய்வீக கதாபாத்திரம் கதைக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தி இருந்ததால் அதன்பின் பல படங்களில் குழந்தை தெய்வமாக ஸ்ரீதேவி நடித்தார்.

1971ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பூம்பட்டா எனும் திரைப்படம் ஸ்ரீதேவிக்கு கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுத்தந்தது. 1972 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ராணி மேரா நாம் எனும் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானார்.

தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் 1976 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படம் மூலம் முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான பதினாறு வயதினிலே திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சிகப்பு ரோஜாக்கள், பிரியா, ஜானி என பல வெற்றி படங்களில் ஸ்ரீதேவி தொடர்ந்து நடித்தார்.

1979ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவி பாலிவுட்டின் மக்கள் கொண்டாடும் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார். 1986 ஆம் ஆண்டு வெளிவந்த நான் அடிமை இல்லை திரைப்படத்திற்குப் பின் 26 ஆண்டுகள் ஸ்ரீதேவியின் எந்த படமும் தமிழில் வெளியாக வில்லை. 2012ஆம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் ஸ்ரீதேவி. இப்படத்தில் தல அஜித் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு தளபதி விஜயின் புலி திரைப்படத்தில் ராணி யவன ராணி எனும் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்தார். இதுவே இவர் நடித்து வெளிவந்த கடைசி தமிழ் திரைப்படம்.

1981ம் ஆண்டு மூன்றாம் பிறை திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மாம் திரைப்படம் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. இவை மட்டுமின்றி இந்திய அரசின் நான்காவது உயர் மதிப்பிற்குரிய விருதான பத்மஸ்ரீ விருது 2013 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் ஆன சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய அனைவருடனும் இணைந்து ஸ்ரீதேவி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஸ்ரீதேவி காலமானார்.

இவரது இழப்பு இந்திய சினிமாவிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது. பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தனது 4 வயது முதல் நடித்து வந்த ஸ்ரீதேவி அவர்கள் இந்திய சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத கதாநாயகியாக உருவாக்கியுள்ளார்.