Cinema News Specials Stories

Versatile Actor மாதவன்!

Madhavan

மாதவன் என்ற பெயரை கேட்கும் போது, பார்க்கும் போது உடனடியாக நினைவுக்கு வருவது அலைபாயுதே, மின்னலே போன்ற காதல் திரைப்படங்கள் தான். சாக்லேட் பாய்/லவ்வர் பாய் மாதவன் தான் பெரும்பாலானோருக்கு நினைவில் வருவார்.

ஆனால் நடிகர் மாதவன் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தன்னை முழுமையாக பொருத்திக் கொள்ளக்கூடிய திறமைசாலி. ஒரு கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியவர். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இந்திய சினிமாவில் தற்போதுள்ள சிறந்த நடிகர்களுள் மாதவனும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. அலைபாயுதே, மின்னலே படங்கள் அனைவரும் அறிந்தது. அலைபாயுதே படத்தில் ஷாலினி, மின்னலே படத்தில் ரீமா சென் இரு கதாநாயகிகளும் ஆண்களால் எவ்வளவு ரசிக்கப்பட்டார்களோ, அதை தாண்டி பெண்களால் அதிகம் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்ட கதாநாயகன் மாதவன்.

இன்று சமூகவலைதளங்கள் வளர்ந்து பெருகியிருக்கும் சூழலில் பல கதாநாயகர்கள் சின்னத்திரையில் இருந்தும், சமூகவலைதளங்கிலிருந்தும் கூட வெள்ளித்திரைக்கு வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக 1990 களில் சின்னத்திரையில் அறிமுகமாகி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, விடாமுயற்சியின் காரணமாக சினிமாவிற்கு வந்தவர் மாதவன்.

1996 முதல் 1998 வரை நாடகங்கள் மற்றும் சில வேவ்வேறு மொழிப் படங்களில் நடித்திருந்த மாதவனுக்கு 2000 வருடத்தில் அடித்தது ஜாக்பாட். அலைபாயுதே படத்தின் கதாநாயகனாக மணிரத்னத்தால் தேர்வு செய்யப்பட்டார். அங்கு தொடங்கிய அவரது வெற்றிப் பயணம் இன்று வரை நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுவரை மாதவன் நடித்த படங்களில் உள்ள வித்தியாசமான, வெவ்வேறு முக்கிய கதாபாத்திரங்களை தற்போது பார்ப்போம். அலைபாயுதே, மின்னலே படங்களை ஆரம்பத்திலேயே பார்த்து விட்டோம்.

Alai Payuthey (2000) | MUBI

அடுத்ததாக 2002-ல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் கணவனாகவும், தந்தையாகவும் நடித்து அசத்தியிருப்பார். அதே ஆண்டில் யாரும் எதிர்பாராத விதமாக ரன் திரைப்படம் வெளியானது. அதுவரை யாருமே மாதவனை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ரன் திரைப்படம் அன்றைய தலைமுறைக்கு ஒரு ட்ரெண்ட் செட்டிங் திரைப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை இன்று தொலைக்காட்சியில் போடும் போது கூட பலரும் ரசித்து பார்ப்பார்கள்.

தொடர்ந்து அன்பே சிவம் திரைப்படத்தில் வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் கமலுக்கு ஈடு கொடுத்து அழகாக நடித்திருப்பார். அதனை தொடர்ந்து நளதமயந்தி படத்திலும் நகைச்சுவையில் மிரட்டியிருப்பார்.

அடுத்தடுத்து லேசா லேசா, ப்ரியமான தோழி, ஜே ஜே என மாதவன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும், அனைத்து பாடல்களும் ஹிட். 2004-ல் வெளியானது ஆயுத எழுத்து. யாருமே எதிர்பார்க்காத தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் மாதவன் கலக்கியிருந்தார். மொட்டை தலையுடன் வலுவான உடலுடன் சூர்யாவுக்கு எதிரியாக ஆக்ரோஷமான வில்லனாக வலம் வந்தார்.

Ayitha Ezhuthu (2004) - Photo Gallery - IMDb

அடுத்து 2006-ல் சீமான் இயக்கத்தில் தம்பி திரைப்படத்தில் புரட்சிகர நாயகனாக நடித்திருந்தார். அதே வருடத்தில் வெளியான குரு திரைப்படத்தில் அறிவார்ந்த அமைதியான ஒரு வில்லன் கதாபாத்திரம்.

பின்னர் 2009-ல் மாதவன் நடிப்பில் திகில் திரைப்படமான யாவரும் நலம் வெளியாகி ஹிட்டடித்தது. அதே வருடம் இந்தியில் அமீர்கானுடன் இணைந்து 3 Idiots படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். 2010-ல் மீண்டும் கமலுடன் இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்திருந்தார்.

2011-ல் கங்கனாவுடன் நடித்து வெளியான இந்தி திரைப்படம் Tanu Weds Manu பெரிய ஹிட். இதன் இரண்டாம் பாகமும் 2015-ல் வெளியாகி ஹிட்டானது. 2012-ல் தமிழில் வெளியான வேட்டை திரைப்படத்தில் ஆர்யாவுக்கு அண்ணனாக மாறுபட்ட போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

R. Madhavan Images, Photos, Pics And HD Wallpapers - Wallpaper HD Photos

2016-ல் வெளியான இறுதிச்சுற்று, 2017-ல் வெளியான விக்ரம் வேதா, 2021-ல் வெளியான மாறா, உள்ளிட்ட திரைப்படங்களும் மாதவனின் சிறந்த நடிப்புக்கான சான்றுகள்.

மேலும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி நம்பி நாராயணன் அவரது வாழ்க்கை வரலாறு படத்திலும் மாதவன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த வருடம் பல்வேறு மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படி பல்வேறு கதைக்களங்களில், அதற்கேற்ற கதாபாத்திரமாக தன்னை உருமாற்றிக் கொண்டு நடித்து அசத்திக் கொண்டிருக்கிறார் மாதவன்.

எந்த திரைப்படத்திலும் எந்த கதாபாத்திரத்தையும் குறை கூற முடியாத வகையில் தனது கதாபாத்திரங்களை வெளிப்படுத்தியிருப்பார். இனியும் தொடர்ந்து பல்வேறு அட்டகாசமான கதாபாத்திரங்களில் நடிகர் மாதவன் நம்மை மகிழ்விக்க சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo