தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஆச்சி மனோரமா, நடிகர் திலகத்திடம், நீங்க நாயனத்துல விசை வச்சி ஊதுறதா சொல்லுறாக… உங்க நாயனத்துல மட்டும் எப்பிடி இப்பிடி இசை வருது-ன்னு கேட்பாங்க. அப்படி நாம யார்கிட்டயாவது கேட்கணும்னா, அது இசைஞானி இளையராஜாகிட்ட தான் கேக்கணும்.
அவர் ஆர்மோனியத்துல கைவச்சா மட்டும் எப்பிடி தான் உள்ளூர் தொடங்கி உலகளாவிய இசை வரைக்கும் வந்து விழுதுன்னு தெரியல. அம்மா, அண்ணன்கள் தந்த இசை உற்சாகத்துல இசை கூடவே வளர்ந்த இளையராஜா சின்ன வயசுல சினிமா தியேட்டர்ல கேக்குற பாடல்களை கேட்டு, அந்த மெட்டுல தானே சொந்தமா பாட்டு எழுதி, அத பாடி வளர்ந்தவரு. ஆரம்பத்துல அண்ணன்களோட, கலை மேடைகள்-ல பெண் குரலில் பாடி வந்த இளையராஜா சில பாடல்களுக்கு வாத்தியங்கள் வாசிக்கவும் செஞ்சாரு.
அதுக்கு அப்பறம் சில படங்கள்-ல இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் கூட உதவியாளரா வேலை பாத்தாரு. அதுக்கு பிறகு பல வாய்ப்புகள் வர்ற மாதிரி இருக்கும்; ஆனா பேச்சளவிலேயே காணாம போயிடும்; ஒரு கட்டத்துல ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி பூஜைக்கு போறப்ப வாய்ப்பு போயிடுச்சு.
இந்த நேரத்துல வந்தது தான் பஞ்சு அருணாச்சலம் தந்த அன்னக்கிளி. அதை அப்டியே புடிச்சுக்கிட்டு இசைவானத்துல பறக்க ஆரம்பிச்சாரு. அந்த படத்துல இருக்க அன்னக்கிளி பாட்டு அவரோட அம்மா வழக்கமா பாடுற தாலாட்டு பாட்டு. அதுல சில வரிகளை அப்படியே பயன்படுத்தி இருப்பாரு.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாட்டு கூட அவங்க அம்மா பாடுற கும்மி பாட்டு தான். அவர் இசைல வந்த ‘ஜனனி ஜனனி’ பாட்டு எப்டி உருவாச்சு தெரியுமா? எந்த இசை மெட்டும் இயக்குநர்களுக்கு புடிக்காம கடைசி நேரத்துல மூகாம்பிகை படத்துக்கு முன்னாடி ராஜா அவர்கள் நிக்கும் போது இந்த பாட்டு தோணுச்சாம்.
இதயம் ஒரு கோவில் பாடல் மூலமா அவர் பாடலாசிரியராவும் ஆனாரு. இளையராஜா இசையமைச்சு ஓப்பனிங் சாங் அவரே பாடி பூஜையை துவங்கி வச்சா படம் கதை இல்லைன்னாலும் ஓடும் அப்பிடின்னு ஒரு நம்பிக்கை 80’கள்-ல நிறைய தயாரிப்பாளர்களுக்கு இருந்துச்சு. அது உண்மையாவும் இருந்துச்சு.
இதனை கரகாட்டகாரன் படத்தின் ‘பாட்டாலே’ பாடலில் அப்படியே பதிவும் செய்து இருப்பார். மோகன், ராமராஜன், முரளி இந்த மாதிரி சாதாரண நாயகர்களின் படங்களுக்கு அசாதரண வெற்றி தந்தது இளையராஜாவோட இசை தான்.
நாசருடைய அவதாரம் படத்தில் வரும் தென்றல் வந்து தீண்டும் போது மாதிரி எக்கச்சக்கமான இளையராஜா இசையில் உருவான பாடல்கள் பல படங்களுக்கு அடையாளாமாக இருக்கிறது.
இளையராஜா பாடல்கள் இல்லையென்றால், அந்த படங்கள் அடையாளமே இல்லாமல் போயிருக்கும். ராஜ்கிரண் இளையராஜாவிடம் அனுமதி வாங்கிவிட்டுதான் கதையே தயாரிப்பாராம். கமலின் ஹேராம் படத்துக்கு வேறொருவர் இசையமைத்து ஒளிப்பதிவு ஆன பிறகு, எடுக்கப்பட்ட காட்சிக்கு இசையமைத்து அதையும் ஹிட்டாக்கி காட்டியவர் ராஜா.
ஆனால் சில இயக்குநர்கள் நீங்கள் இல்லையென்றால் நான் படம் செய்யமாட்டேன் என்று சொன்னால் அவர்களுக்கு இசையமைத்தே கொடுக்கமாட்டாராம். இசை என்னிடமிருந்து வருகிறது… ஆனால் நான் தான் இசை என்று யாரும் நம்ப வேண்டாம் என சொல்வாராம். பார்த்திபனின் புதியபாதைக்கு அவர் இசையமைக்காமல் போனது இப்படித்தான்.
அந்த சமயத்துல பல வருசமா தீபாவளிக்கு எல்லா படமும் இளையராஜா இசையோடதான் வரும். ஒரே சமயத்தில் பல படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் எந்த பாடலிலும், பிண்ணனி இசையிலும் ஒன்றை போல இன்னொன்றின் சாயல் இருக்காது. அந்த மேஜிக் எப்படி என்று தான் தெரியவில்லை.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா, சிம்பொனி இசையின் மூலமாக பிரபஞ்சம் முழுவதும் பரவினாரு. நான் இந்த பிறவியில் உங்களோடு இருக்கிறேன்; என்னை இப்போதே அனுபவித்து கொள்ளுங்கள்… என்று அடிக்கடி இளையராஜா சொல்வதுண்டு. ஆனால் உங்கள் இசையை கொண்டாடி அனுபவிக்க எங்களுக்கு இந்த ஒரு பிறவி பத்தாதே எங்கள் இசைஞானியே…
இசைத்தாயவள் தந்த ராசாவே… நீங்கள் உங்கள் இசை போல பல்லாண்டு எங்களுக்காக வாழ வேண்டும்!
Add Comment