Cinema News Specials Stories

‘விடுதலை’ தமிழ் சினிமால ரொம்ப முக்கியமான ஒரு படம்… ஏன் தெரியுமா?

ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகிறது. ஜெயமோகன் எழுதிய இந்த கதையின் காலகட்டம் 1990. நக்சலைட்டுகளின் அதாவது மார்க்ஸிஸ்ட், லெனினிஸ்ட் இயக்கங்களின் கடைசி காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்து எழுதிய கதை.

இந்த சமயத்தில் தான் தமிழ் மக்கள் மீது காவல்துறை பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது, வன்கொடுமைகளை நிகழ்த்தியது, வாச்சாத்தி கொடுமைகள் தருமபுரியில் நிகழ்ந்தது, வீரப்பன் வேட்டை எனும் பெயரில் பழங்குடி மக்களை சூரையாடியது. அரசு அதிகாரத்தின் கோரமான கைகளால் ஒன்றும் அறியாத மக்கள் பலரது வாழ்க்கை சீரழிந்தது.

துணைவன் சிறுகதை வாச்சாத்தி வன்முறை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டதாக எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்கனவே கூறியுள்ளார். அதனால் படமும் அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் என பலரும் கூறியுள்ளனர். ஏன், எதனால், எப்படி நிகழ்ந்தது வாச்சாத்தி வன்முறை.

தருமபுரியில் உள்ள ஒரு மலைக்கிராமம் தான் வாச்சாத்தி. அப்பகுதியில் சந்தன மரங்கள் உண்டு. 1992 ஆம் ஆண்டு ஆய்வு சம்மந்தமாக அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் ஒரு விவசாயியின் நிலத்தில் சந்தன மரக்கட்டைகளை பார்த்துள்ளனர். இது யாருடையது என கேட்டு விவசாயியை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கேள்விப்பட்டு கிராம மக்கள் ஒன்றிணைந்து சென்று வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை சண்டையில் முடிய வாச்சத்தி மக்கள் வனத்துறையின் கடும் கோபத்திற்கு ஆளாகின்றனர். வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்து சந்தன மரம் கடத்துவதாக கூறி ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் கொடூரமாக அடித்து துன்புறுத்துகின்றனர்.

13 வயது பெண்குழந்தை உட்பட 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பின் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நீதி கேட்டு வழக்கு பதிவு செய்தனர். அதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் குரல் கொடுக்க வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. அதில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த 269 அரசு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சம்பவம் நிகழ்ந்து 19 ஆண்டுகளுக்கு பின் 2011 ஆம் ஆண்டு தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் அனைவரும் குற்றவாளிகள் என அறிவித்தது.

இந்த 19 வருடங்களில் குற்றம் சுமத்தப்பட்ட 54 பேர் உயிரிழந்த நிலையில் மீதமிருந்த 215 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது ஒரு பக்கம் என்றால் விஜய் சேதுபதி தமிழகத்தை சேர்ந்த புலவர் கலியபெருமாள் என்பவருடைய கதாபாத்திரமாக வாத்தியாராக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனும் வாத்தியார் கதாபாத்திரத்தை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதுகுறித்து எதுவும் என்னால் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

ஊர்மக்களுக்காக புலவர் கலியபெருமாள் நக்சல்பாரி இயக்கத்துடன் சேர்ந்து செல்வந்தர்களின் கைவசமிருந்த நிலங்களை மீட்டெடுத்து ஏழை மக்களுக்கு பிரித்துக் கொடுத்தவர். ஆயுதம் ஏந்திய போராட்டங்களும் செய்திருக்கிறார். பின்னாளில் இதற்காக கைது செய்யப்பட்ட கலியபெருமாள் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு, இறுதியாக 1983ஆம் ஆண்டு நீண்ட கால பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவங்களையெல்லாம் தொகுத்து வெற்றிமாறன் செய்துள்ள புதிய சம்பவம் தான் விடுதலை திரைப்படம். இசைஞானி இளையராஜாவின் இசை படத்தை மேலும் அழகாக்கியுள்ளது. குறிப்பாக வழி நெடுக காட்டுமல்லி பாடல் மனதை வருடும் பாடலாக உள்ளது.

ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ தான் கதாநாயகி. இவர் ஏற்கனவே பாவக்கதைகள் Anthology-ல் சுதாகொங்கராவின் தங்கம் குறும்படத்தில் கதாநாயகியாக சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்திலும் நிச்சயம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

வடசென்னை, அசுரனுக்கு பிறகு புரட்சி இயக்குநர் வெற்றிமாறனின் சிறப்பான மற்றொமொரு சம்பவமாக விடுதலை பாகம்-1 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் கூறுங்கள்.

Article By MaNo