Stories Trending

ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டத்தில் வாலு !!

அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வெளிவந்த திரைப்படம் வாலு. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி, சந்தானம், வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு 2015 வரை நீடித்தது. இப்படத்தை முன்னோடியாக வைத்து கன்னடத்தில் யாஷ் நடிப்பில் சாந்து ஸ்டிரெயிட் பார்வர்டு எனும் திரைப்படம் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் வேலையில்லாத இளைஞனாக சிம்பு நடித்திருப்பார். பிரியா எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஹன்சிகா மோத்வானி மீது சக்தி என்கிற சிம்பு காதல் கொண்டு, எப்படி அந்த காதலில் வெற்றி பெறுகிறார் என்பதே இப்படத்தின் கதை சுருக்கம். நீண்ட இடைவேளைக்குப் பின்பு சிம்பு நடித்து வெளிவந்த திரைப்படம் வாலு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் தமன் இசையில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக “நயன்தாரா வேணாம்” எனும் பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இப்படத்தில் அமைந்த ஐந்து பாடல்களில் மூன்று பாடல்களுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.

இப்படத்தில் சந்தானம் மற்றும் சிம்பு இணைந்து வரும் காமெடிக் காட்சிகள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி, ஆக்ஷன், காதல் என அனைத்தையும் உள்ளடக்கிய மசாலா கமர்சியல் விருந்தாக சிம்பு ரசிகர்களுக்கு வாலு திரைப்படம் அமைந்தது. இப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் இணையத்தில் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

#5YearsOfVAALURampage என்ற டேகில் இணையத்தில் ரசிகர்கள் வாலு திரைப்படத்தை குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.