இந்தியா விடுதலையடைந்த சமயத்தில் வெளிமாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த ஒரு குடும்பம் சென்னையில் குடியேறியது. அப்பா, அம்மா, ஒரு மகன், ஒரு மகள். அப்போது நிலவிய பதற்றமான அரசியல் சூழலில் பெட்டி, படுக்கைகளை மட்டும் அள்ளிப்போட்டுக்கொண்டு அரக்கப் பறக்கக் கிளம்பி வந்திருந்தனர். சென்னையில் சரியான வீடு அமையவில்லை. புதிய ஊரில் அவர்களுக்கு உதவிசெய்யவும் உற்றாரோ உறவினர்களோ இல்லை. ஆனால், இன்னும் சில நாள்களில் மகளுக்குத் திருமணம். பழைய ஊரில் நல்ல வேலையில் அப்பா இருந்தபோதே நிச்சயிக்கப்பட்ட வரன். இப்போது திருமணத்தை நிறுத்தவோ ஒத்திபோடவோ இயலாது. கையில் சுத்தமாகப் பணம் இல்லை. அன்றாடச் செலவுகளைக் கடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது.
அவர்களது சேமிப்பு முழுவதும் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு திட்டத்தில் முடங்கியிருந்தது. அன்றைய சட்டத்தின்படி மொத்தமாக ஒரே நாளில் சேமிப்புப் பணத்தை எடுத்துவிட முடியாது. பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக நாடு இருந்த நிலைமையில், அது நம் பணமே என்றாலும் சிறுகச் சிறுகத்தான் செலவுக்கு எடுக்க முடியும். கல்யாணத்துக்கோ பெரிய செலவுகள் காத்திருக்கின்றன. மண்டபம் பிடிக்க வேண்டும், மகளுக்குப் பட்டுப்புடவைகள், நகைகள், புகுந்த வீட்டுக்குத் தேவையான பண்ட பாத்திரங்கள் என எக்கச்சக்கமான பொருள்களை வாங்கியாக வேண்டும். யாரிடம் உதவிகேட்பது, எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் குடும்பமே திண்டாடிக்கொண்டிருக்கிறது.
அன்றொரு நாள் அவர்கள் குடியிருக்கும் தெரு வழியாக மிதிவண்டியில் புடவைகளைக் கூவி விற்றுக்கொண்டு ஒருவர் போகிறார். தன் மகனை அனுப்பி அவரை அழைத்துவரச் சொல்கிறார் தாய். மிதிவண்டிக்காரரிடமே கொஞ்சம் பட்டுப் புடவைகளும் இருக்கின்றன. மகளுக்குத் தேவையான ஆடைகளைச் சிக்கனமான விலையில் வாங்கிக்கொள்கிறர்கள். அந்த அம்மா கூச்சத்துடன் தயங்கித் தயங்கி, ‘இந்தப் பட்டுப் புடவைகளுக்கு மட்டும் மாசா மாசம் தவணை முறையில பணம் தரட்டுங்களா?’ எனக் கேட்கிறார்.
புடவைக்காரர் கொஞ்சமும் யோசிக்காமல், ‘எடுத்துக்கங்கம்மா’ எனச் சொல்லிவிடுகிறார். அந்த அம்மாளுக்கு ஆச்சரியம். தவணை முறையில் தர முடியும் என்கிற தைரியத்தில் இன்னும் சில துணிகளை எடுக்கிறார்.
‘நான் கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. ஏன் இப்படி தவணையில வாங்கறீங்க? வழக்கமா கல்யாணத்துக்கு எடுக்கறவங்க யாரும் முகூர்த்தப் புடவையைக் கடன்சொல்லி வாங்க மாட்டாங்க, அதான் கேட்கறேன்.’
தாங்கள் சென்னையில் குடியேறிய கதையை அழுதுகொண்டே புடவைக்காரரிடம் தாயார் சொல்கிறார். அவருக்கு மனம் இளகிவிடுகிறது. அந்தக் குடும்பத்துக்கு நம்பிக்கை அளித்துவிட்டு, ‘நாளைக்கு வரேன்’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். அடுத்த நாள், ஒரு தள்ளுவண்டியில் பாத்திரப் பண்டங்களோடு வருகிறார். ‘உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கங்க. காசு அப்புறமா கொடுங்க’ எனச் சொன்னதோடு அல்லாமல் தன்னிடமிருந்த பணத்தையும் அவர்களுக்குக் கடனாக அளிக்கிறார். ‘செலவுக்கு வச்சுக்கங்க.’ அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை.
அம்மா கேட்கிறார், ‘எங்களை நம்பி எப்படி இவ்ளோ உதவி செய்யறீங்க? எங்களால இதைத் திருப்பித் தர முடியாம போயிட்டா? ஒருவேளை நாங்க உங்களை ஏமாத்திட்டா?’ அதற்கு அவர், ‘இந்த வியாபாரத்தில மனுசங்களை எனக்குப் படிக்கத் தெரியும். நீங்க நிச்சயமா ஏமாத்தற வகை இல்ல. உங்களால பணத்தைத் திருப்பித் தர முடியலன்னாலும் என்ன கெட்டுப்போச்சு? ஒரு பொண்ணோட கல்யாணத்தை நடத்திவச்ச புண்ணியமே போதும்’ என்கிறார். எந்த எதிர்பார்ப்புமின்றி அவர் காலத்தினாற் செய்த நன்றியால் அக்காவின் திருமணம் நல்லபடியாக நடக்கிறது. சிக்கல்களிலிருந்து அந்தக் குடும்பம் மெல்ல மெல்ல மீள்கிறது.
அந்தப் புடவைக்காரர்தான் நல்லி சில்க்ஸின் நிறுவனர் ‘நல்லி’ சின்னசாமி செட்டியார். இதை எழுதியவர் எழுத்தாளர் அசோகமித்திரன். தனது அக்காவின் திருமணத்துக்கு உதவிய நல்லி சில்க்ஸின் பெயரைக் காணும்போதெல்லாம் உணர்ச்சி மிகுதியால் தன் நெஞ்சம் பொங்கிவிடும் என அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.
ஒரு உதவி அல்லது கைம்மாறு இரண்டு விஷயங்களால் மேன்மையடைகிறது. அதை நாம் அந்நியர்களுக்குச் செய்யும்போது, அந்த உதவியால் எந்தவிதமான லாபத்தையும் எதிர்பார்க்காதபோது! உதவி செய்ததும் அதை மறக்கிறவராலேயே பரிபூரண மகிழ்ச்சியை அடைய முடியும்.
Author – அசோகமித்திரன்
Source – Gokul Prasad (https://www.facebook.com/share/p/1G6s9989ms/)