சமீபத்தில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள தலைக்கூத்தல் என்ற படத்தின் டீசர் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. தலைக்கூத்தல் என்றால் என்ன என்பது குறித்து விரிவாக இப்போது பார்ப்போம்.
வயதான காலத்தில் படுத்த படுக்கையில் முடியாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் முதியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி விட்டு, ஈரத்துணியில் படுக்க வைத்து குளிர்ந்த பால் அல்லது இளநீர் கொடுத்து ஜன்னி வர வைத்து அவர்களை சாக செய்வதே தலைக்கூத்தல் என்பதாகும். தலைக்கு ஊத்தல் என்பதே தலைக்கூத்தல் என்று மருவி நிற்கிறது.
இது ஒரு பக்கம் முதியோர்களின் கருணைக் கொலையாக கருதப்படுகிறது. மறு பக்கம் ஆணவக் கொலையாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? என்று ஆராயும் போது நம் நாட்டில் வறுமை தலை விரித்தாடிய காலகட்டத்தில் உடலுழைப்பில் ஈடுபட முடியாத, படுத்த படுக்கையில் இருக்கும் முதியவர்களை கொல்வதற்காக இந்த முறை தோன்றியிருக்கலாம், அல்லது முன்னோர்களின் நாட்டுப்புற நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிய ஒரு பழக்கமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் யாரெல்லாம் இதை செய்கிறார்கள் என்பது குறித்து சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் முடிவுகளை தற்போது பார்ப்போம்.
இந்த கணக்கெடுப்பின் படி பெரும்பாலும் படுக்கையிலிருக்கும் முதியவர்களை அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே கொல்ல முடிவெடுத்து விடுகிறார்கள். எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்படுகிறது என்ற கேள்விக்கு, படுக்கையில் இருந்து இறுதி காலத்தில் உயிருக்கு போராடி கஷ்டப்படக் கூடாது என 49% பேர் கூறியுள்ளனர்.
உடல் அல்லது மன ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்ட முதியவர்கள் இனி படுக்கையில் தான் சாகும் வரை இருக்கமுடியும் எனும் நிலை ஏற்படும் போது இந்த முடிவை எடுப்பதாக 34% பேர் கூறியுள்ளனர். முதியவர்களுக்கான மருத்துவ வசதி செய்ய இயலாத பொருளாதார பின்னடைவில் இருப்பதால் இந்த முடிவை எடுப்பதாக 23% பேர் கூறியுள்ளனர்.

மேலும் இந்த முடிவை யார் எடுக்கிறார்கள் என்று பார்த்தால் 33% மகன்கள், 22% மருமகன்கள், 17% மருமகள்கள், 10% மகள்கள், 6% சொந்தங்கள், 4% அக்கம் பக்கத்தினர், 8% மற்றவர்கள் எடுக்கிறார்கள் என்ற தகவல்கள் பெறப்பட்டது. இந்த வழக்கம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெரும்பாலும் வழக்கில் இருப்பதாகவும் அறியப்பட்டது. இந்தியாவில் இந்த வழக்கம் சட்டப்படி குற்றம்.
பிற நாடுகளில் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் நீண்ட காலமாக ஒரு நோயாளி உயிர் வாழும் சூழலில், அதனை அகற்றி கருணைக் கொலை செய்யலாம். மேலும் நோயாளியின் சம்மதத்துடன் கருணைக்கொலையை நிகழ்த்தலாம். பெல்ஜியம், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்த நடைமுறை வழக்கில் உள்ளது. நோயாளி நினைவிழக்கும் நிலையில், அவர் குடும்பத்தை சேர்ந்த 3 அல்லது 4 உறுப்பினர்களின் சம்மதத்துடன் கருணைக் கொலையை நிகழ்த்த அல்பேனியா நாடு அனுமதித்துள்ளது.

இப்படியாக பலவிதமான சட்டங்கள் வெவ்வேறு நாடுகளில் வழக்கத்தில் உள்ள நிலையில், இங்கு அதற்கு அனுமதி கிடையாது. இருப்பினும் பல இடங்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு தலைக்கு ஊத்தலில் இருந்து 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தப்பித்து தனது உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தார். இந்த சம்பவம் பற்றி பரவலாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இந்த சம்பவங்களை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்த தலைக்கூத்தல் முறையை மையமாக வைத்து ஏற்கனவே தமிழில் பாரம் என்ற திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தற்போது தலைக்கூத்தல் என்ற பெயரிலேயே சமுத்திரகனி நடித்துள்ள திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்களை தனது படங்களின் வழி சொல்லி வரும் சமுத்திரகனி இந்த படத்திலும் ஒரு நல்ல கருத்தை கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.