கிபி 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானியச் சக்கரவர்த்தி இரண்டாம் கிளாடியஸ் ஒரு கொடூரமான அறிவற்ற அரசனாக ஆட்சிபுரிந்து வந்துள்ளார். மக்களுக்கு எதிரான அவருடைய கொடுங்கோல் ஆட்சி முறையால பல இராணுவ வீரர்கள் அவரது இராணுவத்திலிருந்து விலகினர். இராணுவ பலத்தை அதிகரிக்க நினைத்த இரண்டாம் கிளாடியஸால் புதிய இராணுவ வீரர்களை வேலையில் சேர்க்க முடியவில்லை.
இந்த மாதிரியான ஒரு அரசனின் இராணுவத்தில் பணிபுரிய நாட்டிலுள்ள ஆண்களுக்கு இஷ்டமில்லை. மந்திரிகளின் ஆலோசனைகளும் பலனளிக்கவில்லை. இதனால் எரிச்சலான மன்னர் ஆழ்ந்து யோசிக்கிறார். திருமணம் மற்றும் காதல் உறவுகளால் தான் ஆண்கள் இராணுவத்தில் இணைய தயங்குகிறார்கள் என நினைக்கிறார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் கொடூரமான சட்டம் ஒன்றை இயற்றுகிறார். அதாவது ஆண்கள் யாரும் காதலோ, திருமணமோ செய்யக் கூடாது என்பது தான் அந்த சட்டம்.
ரோமாபுரியில் இனி யாரும் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ கூடாது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் நடக்க கூடாது. மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னொரு நாளில் பொதுஇடத்தில் மக்கள் முன்பு கல்லால் அடிக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுவார்கள் என நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்.
இதைக் கேட்ட மக்கள் பேரதிர்ச்சியடைந்தனர். நாடே சோகத்தில் மூழ்கியது. ஆனால் ஒரு பாதிரியார் மட்டும் அரசனின் இந்த முடிவு முட்டாள் தனமானது, மக்களுக்கு எதிரானது என அரசரின் கட்டளையை மீறி இரகசியமாக பல திருமணங்களை செய்து வைத்தார். அந்த பாதிரியாரின் பெயர் தான் வாலண்டைன்.
இந்த செய்தி ஒரு கட்டத்தில் அரசனின் காதுக்கு வர, பாதிரியார் வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது. சிறையில் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்தார். இப்படியாக வாலண்டைன் சிறையிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியஸை சந்திக்கிறார். வாலண்டைனுக்கும் அஸ்டோரியஸுக்கும் காதல் மலர்கிறது.
மனிதர்கள் இருக்கும் வரை காதலுக்கு அழிவு கிடையாது. அஸ்டோரியஸ் தனது காதலர் வாலண்டைனை சிறையிலிருந்து தப்பிக்க வைக்க முயன்றாள். இதை தெரிந்து கொண்ட அரசன் வாலண்டனை வீட்டுச் சிறையில் வைத்தான். வாலண்டைனின் மரண தண்டனைக்கான நாள் நெருங்கியது.
அஸ்டோரியசுக்கு ஒரு கவிதை எழுதி ஒரு காவலரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு மரண தண்டனையை ஏற்றார் வாலண்டைன். மக்கள் மனதில் இவரது இறப்பு பெரும் தாக்கத்தையும் மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்து சென்றது.
கல்லால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவருடைய கடிதத்தை அஸ்டோரியஸிடம் படித்து காட்டுகின்றனர். கடிதத்தில் கடைசியாக உன்னுடைய வாலண்டைனிடமிருந்து(From Your Valentine) என முடித்திருக்கிறார்.
இந்த கடைசி வார்த்தைகள் தான் அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலான காதலர் தின அட்டைகளில் இடம்பிடித்துள்ளது. ரோம் ஐரோப்பியாவின் கட்டுப்பாட்டில் வந்த பின்பு போப்பாண்டவர் ஒருவரால் வாலண்டைன் புனிதராக அறிவிக்கப்பட்டு அவர் இறந்த நாளான பிப்ரவரி 14 ஆம் தேதி வாலண்டைன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவே பின்னாளில் காதலர் தினமாக உலகம் முழுக்க பரவியதாக கூறப்படுகிறது.
இதை தாண்டி காதலர் தினத்திற்கான வேறு சில வரலாறுகளும் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோரால் இதுவே உண்மையான வரலாறாக கூறப்பட்டு வருகிறது.