ஒவ்வொரு Weekend-லும் ஒரு படம் பார்த்துவிட வேண்டும் என்ற கொள்கையோடு சிலர் இருப்பார்கள், சிலர் தனக்கு பிடித்த ஹீரோவின் படம் வெளிவரும் முதல் நாளே அந்த படத்தை பார்த்துவிடுவார்கள், மேலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒரு முறை, பெரிய ஹீரோக்களின் படம், நண்பர்களோடு, குடும்பத்தோடு என்று எதோ ஒரு காரணத்தினால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் திரையரங்குகளில் படம் பார்த்துவிடுவார்கள். இப்படி சினிமா மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையாகவே இருக்கிறது.
குறிப்பாக தமிழ் படங்கள் அனைத்து காலகட்டங்களிலும் தொடர்ந்து மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது, சினிமாவிற்கான கொண்டாட்டம் இங்கு எப்பொழுதுமே கொஞ்சம் அதிகப்படியாதாகவே இருக்கும், மக்களின் அன்றாட வாழ்வியலில் இருந்து அரசியல் வரை இங்கு திரைப்படங்களுடைய பங்கு இருக்கிறது.
இப்படி மக்களின் பெரும் ஆதரவோடு இயங்கி வரும் தமிழ் சினிமாவிற்கு 2024 ஒரு போதாத காலம் என்றே கூறலாம், ஏனென்றால் 2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மூன்று மாதமாக வெளிவந்த எந்த ஒரு புது தமிழ் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிதாக பூர்த்தி செய்யவில்லை, இதன் விளைவாக 90″ மற்றும் 20″களில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டு வருகின்றனர், அந்த படங்களை மீண்டும் பெரிய திரையில் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனரே தவிர புதுப்படங்களை காண மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை.
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பல படங்கள் வெளியாக உள்ளது என்ற பெரும் எதிர்பார்ப்புடன் 2024-ஐ துவங்கிய ரசிகர்களுக்கு ஆரம்பமே ஏமாற்றத்தை தரும் அளவிற்கே சில முன்னணி நடிகர்ளின் படம் அமைந்தது. அதன் பின்னர், முன்னணி நடிகர்களின் படம் வெளிவராததும், வெளிவந்த சில படங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததும், சில படங்கள் மக்களிடையே சென்றடையாததுமே தமிழ் சினிமா கடந்த மூன்று மாதங்களாக வறண்டு கிடப்பதற்கு காரணம். இருப்பினும் மஞ்சுமோல் பாய்ஸ், ப்ரேமலு போன்ற மலையாள படங்கள் தாகத்துடன் இருந்த தமிழ் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக அமைந்தது, அப்படங்கள் தமிழகத்தில் பெரும் வசூலை அள்ளியது.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஆரம்பத்தில் இந்த வருடம் வெளியாகும் என்று அறிவித்த பெரும்பாலான முன்னணி நடிகர்களுடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரைக்கு வர இருப்பதால், இந்த சறுக்களில் இருந்து தமிழ் சினிமா மீளும் என்ற நம்பிக்கை உள்ளது, அதுவும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் மட்டுமே!