கற்பனையை காகிதத்தில் கொட்டி அதற்கு ஒரு உருவமும் உயிரும் கொடுப்பதே கலையாகும். அத்தகு கலையை போற்றும் வகையில் அமைந்த தினம் தான் உலக கலை தினம்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி உலகம் முழுவதும் உலக கலை தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கலை மற்றும் படைப்பாற்றலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த நாள், உலகப் புகழ்பெற்ற Mona Lisa ஓவியத்தை உருவாக்கிய மாமேதை Leonardo da Vinci அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் கலை உலகிற்கு புதிய உயிர் ஊட்டிய டாவின்சி, ஓவியர் மட்டுமல்லாமல் வரைவாளர், சிற்பி, கட்டிடக் கலைஞர், பொறியாளர், விஞ்ஞானி, கோட்பாட்டாளர் என பல துறைகளில் தன்னுடைய அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தியவர். கலை மற்றும் அறிவியல் இரண்டையும் ஒருங்கிணைத்து சிந்தித்த அவரது அணுகுமுறை, உலகக் கலை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றது. சுமார் 2500-க்கும் மேற்பட்ட அவரது வரைபடங்கள் மற்றும் குறிப்புகளில் உடற்கூறியல், வானியல், தாவரவியல், வரைபடவியல் போன்ற பல துறைகளில் ஆழமான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.
மனித உடலின் அமைப்பு, தசைகள், எலும்புகள் மற்றும் முகபாவனைகள் குறித்து அவர் கொண்டிருந்த நுணுக்கமான கவனிப்பு, அவரது ஓவியங்களுக்கு இயல்பும் உயிரோட்டமும் அளித்தது. மோனாலிசா ஓவியம் அதன் மர்மமான புன்னகையால் உலகம் முழுவதும் மக்களை கவர்ந்து வருகிறது; அது வரலாற்றில் மிகச் சிறந்த மற்றும் பரவலாக அறியப்பட்ட ஓவியங்களில் ஒன்றாகும். அதேபோல், The Last Supper என்ற அவரது படைப்பு, இயேசு தனது சீடர்களுடன் பகிர்ந்த கடைசி இரவு உணவின் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்துவதால் இன்றளவும் கலை உலகில் சிறப்பாகப் போற்றப்படுகிறது.
டாவின்சி தனது படைப்புகளில் எதார்த்தத்தை மேம்படுத்த உடற்கூறியியல் அறிவை திறமையாகப் பயன்படுத்தினார். மனித உருவங்களை மிக நுணுக்கமாகவும் உயிர்ப்புடன் வெளிப்படுத்திய அவரது புதுமையான நுட்பங்கள், பல தலைமுறைகளாக கலைஞர்களுக்கு ஊக்கமாக இருந்து வருகின்றன. காலத்தைத் தாண்டியும் அவரது படைப்புகள் மக்களை ஈர்த்துக்கொண்டே இருப்பது, அவரது மேன்மையை வெளிப்படுத்துகிறது. எனவே, உலகக் கலை வளர்ச்சிக்கு அவர் அளித்த அபார பங்களிப்பை நினைவுகூரும் விதமாக, அவரது பிறந்த நாளை உலகக் கலை தினமாகக் கொண்டாடுகிறோம்.
Article By – Rj Jeeva

