Specials Stories

Balu Mahendra – ஒளி, உணர்வு, உண்மை நிறைந்த படைப்பாளி

Balu Mahendra Special Article in Tamil 2026
Balu Mahendra Special Article in Tamil 2026

தமிழ் சினிமாவில் காட்சிகள் பேசின காலத்தை உருவாக்கியவர் பாலுமகேந்திரா. கதையை சொல்லாமல் உணர்த்திய இயக்குநர், இயற்கை வெளிச்சத்தை காதலித்த ஒளிப்பதிவாளர், மனித உணர்வுகளை சினிமாவாக மாற்றிய கலைஞர் — இந்த மூன்றும் சேர்ந்த ஒரே பெயர் பாலுமகேந்திரா.

பிறப்பு மற்றும் குடும்ப பின்னணி

பாலுமகேந்திரா 20 மே 1939 அன்று இலங்கையின் கிழக்கு பகுதியான Batticaloa நகரில் பிறந்தார். அவரின் இயற்பெயர் Balanathan Benjamin Mahendran. தமிழ் கலாச்சார சூழலில் வளர்ந்த அவர், சிறு வயதிலிருந்தே கலை, இலக்கியம் மற்றும் புகைப்படக் கலை மீது ஆழமான ஈர்ப்பைக் கொண்டிருந்தார்.

அவரின் தந்தை ஒரு கல்வியாளர்; குடும்பத்தில் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் இருந்தது. ஆனால் பாலுமகேந்திராவை கவர்ந்தது புத்தகங்களும் புகைப்படங்களும் தான். கேமரா வழியாக உலகத்தைப் பார்க்கத் தொடங்கியதே பின்னர் அவரது சினிமா மொழியாக மாறியது.

சினிமாவுக்கு வந்த பாதை

இளமையில் பார்த்த உலக திரைப்படங்களும், குறிப்பாக இத்தாலிய நியோ-ரியலிசம் படங்களும் அவரை ஆழமாக பாதித்தன. மனித வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்யும் அந்த அணுகுமுறை அவரின் சினிமா பார்வையை உருவாக்கியது. பின்னர் இந்தியாவின் பிரபலமான திரைப்படக் கல்வி நிறுவனமான Film and Television Institute of India (FTII), புனேவில் ஒளிப்பதிவை பயின்றார். அங்கேயே அவர் தொழில்முறை சினிமாவின் அடித்தளத்தை அமைத்தார்.

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; வாழ்க்கையின் உண்மை பிரதிபலிப்பு என்ற எண்ணம் அங்கே உருவானது. ஒளிப்பதிவாளரிலிருந்து இயக்குநராக தொடக்கத்தில் பல மொழிப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அவர், தனது முதல் இயக்குநர் முயற்சியாக 1977ஆம் ஆண்டு கோகிலா படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. தமிழில் இயக்குநராக அறிமுகமான “அழியாத கோலங்கள்” திரைப்படம் இளைஞர்களின் மனநிலையை இயல்பாக பதிவு செய்த புதிய முயற்சியாக அமைந்தது.

பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும், இயக்குநராக 23 படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய சில படங்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

  • 1977-ல் ‘கோகிலா’ என்ற கன்னடப் படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இது அவருடைய முதல் படம். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மோகன், ஷோபா ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிறந்த ஒளிப்பதிவிற்கான முதல் தேசிய விருதினை பாலுமகேந்திராவுக்கு இந்தப் படம் பெற்று தந்திருக்கிறது.
  • 1979-ல் ‘அழியாத கோலங்கள்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்தப் படம் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை, பருவ வயதில் எப்படி இருக்கும் என்பதை அப்படியே சொன்ன படம்.
  • 1980-ல் வெளியான படம் ‘மூடுபனி’. மீண்டும் பிரதாப் போத்தன், ஷோபாவை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். பாலுமகேந்திராவுக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம் இது.
  • 1982-ல் மலையாளத்தில் வெளியான படம் ‘ஓளங்கள்’. இது அவர் இயக்கிய முதல் மலையாளப் படம். பூர்ணிமா ஜெயராம், அம்பிகா, அமோல் பாலேகர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ஜானகி பாடிய ‘தும்பி வா தும்பக்குளத்தில்’ பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் க்ளாஸ் ஹிட் அடித்தது.
  • 1982-ல் வெளியான படம் நிரீக்ஷனா. பானு சந்தர், அர்ச்சனா இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் சோதனை முயற்சியில் இறங்கி அங்கேயும் ஹிட் அடித்திருக்கிறார்.
  • 1982-ல் ‘மூன்றாம் பிறை’ படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். நடிப்பிற்காக கமலுக்கும், ஒளிப்பதவிற்காக பாலுமகேந்திராவிற்கும் என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. கண்ணதாசனின் கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே!’ இன்றைக்கும் எவர் கீரின்.
  • 1983-ல் இந்தியில் வெளியான படம் ‘சாத்மா’ கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரீமேக். இளையராஜா இசையமைத்த முதல் இந்திப் படமும் இதுதான்.
  • 1985-ல் வெளியான படம் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ ரஜினிகாந்த், மாதவி இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலுமகேந்திரா இயக்குநராக ரஜினியுடன் சேர்ந்த முதல் படம் இதுதான்.
  • 1988-ல் வெளியான படம் ‘வீடு’. அர்ச்சனா பானுசந்தர் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம். சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
  • 1983-ல் வெளியான மலையாளப் படம் ‘ஓமக்குயில்’. ஒய்.ஜி மகேந்திரன், அருணா, பூர்ணிமா ஜெயராம் நடித்திருக்கின்றனர். கன்னடத்தில் வெளியான ‘கோகிலா’ படத்தின் ரீமேக் இது.

1989-ல் வெளியான படம் ‘சந்தியா ராகம்’. இந்தப் படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா நடித்திருக்கின்றனர். அவருக்கு இந்தப் படமும் தேசிய விருதை அள்ளிக்கொடுத்தது. ‘ எந்த சமரசமும் இல்லாமல் நான் நினைத்ததை இயக்கியிருக்கிறேன்’ என்று பாலுமகேந்திரா சொன்ன படம் இது. இது போன்ற படங்கள் அவரது கலை உலக படைப்பின் அடையாளமாக அமைந்தது.
பாலுமகேந்திராவின் சினிமா சில முக்கியக் கருத்துகளின் மீது அமைந்தது:

  • இயற்கை வெளிச்சத்தில் படமாக்குதல்
  • மனித உணர்வுகளை மிகைப்படுத்தாமல் காட்டுதல்
  • பெண்கள் கதாபாத்திரங்களுக்கு ஆழமான இடம்
  • வாழ்க்கையின் சாதாரண தருணங்களை அழகாக பதிவு செய்தல்

அவருக்கு சினிமா என்பது கவிதை போன்ற காட்சி மொழி. கதாபாத்திரங்கள் பேசாமல் இருந்தாலும், காட்சி பேச வேண்டும் என்பதே அவரது நம்பிக்கை. பல தலைமுறை இயக்குநர்களை உருவாக்கிய கலை உலகின் ஆசான் பாலுமகேந்திரா ஒரு இயக்குநர் மட்டுமல்ல; ஆசிரியரும் கூட. அவரது பட்டறைகள் மற்றும் உதவி இயக்குநர்கள் வழியாக பல புதிய தலைமுறை திரைப்பட கலைஞர்கள் உருவாகினர். 2013ஆம் ஆண்டு வெளியான “தலைமுறைகள்”அவரது கடைசி படமாக இருந்தாலும், அது அவரது வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலித்த திரைப்படமாக அமைந்தது.

ஏன் பாலுமகேந்திரா இன்னும் உயிருடன் இருக்கிறார்?

அவர் உருவாக்கிய காட்சிகள் இன்று கூட புதிய தலைமுறையிடம் பேசுகின்றன. அவரது சினிமா காலத்தை கடந்து வாழ்கிறது. ஒளி, மௌனம், உண்மை — இந்த மூன்றையும் இணைத்து தமிழ் சினிமாவை கவிதையாக மாற்றிய மனிதர் பாலுமகேந்திரா. அவரது படங்கள் முடிந்திருக்கலாம். ஆனால் அவரது பார்வை இன்னும் தொடர்கிறது.

Happy birthday director balu Mahendra