இந்த ஆண்டு 7 ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள திரைப்படம் Everything Everywhere All at Once. 2022 மார்ச் மாதம் ஆங்கிலம், மாண்டரின்(Mandarin) மற்றும் கான்டோனீஸ் (Cantonese) ஆகிய 3 மொழிகளில் வெளியானது. படம் திரில்லர் ஜானரில் வெளியாகி இருந்தாலும் ஆக்ஷன், பிளாக் காமெடி, சயின்ஸ் பிக்சன் என அனைத்தும் கலந்திருந்தது.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய 7 பிரிவுகளில் ஆஸ்கர் வென்றுள்ளது இத்திரைப்படம். வரலாற்றில் முதல் முறையாக சீன வம்சாவளியை சேர்ந்த நடிகை மிஷேல் யோ ஆஸ்கர் வென்றுள்ளார். அதேபோல் முதல் முறை ஆசிய பெண் ஒருவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார் என்பதும் வரலாறு. இவரே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

இதுவரையிலான ஆஸ்கர் வரலாற்றில் பென்-ஹர் (1959), டைட்டானிக் (1997) மற்றும் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் (2003) ஆகிய 3 படங்களும் தலா 11 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதை என்ன தெரியுமா? கதாநாயகி மிச்செல் யோஹ், ஒரு நடுத்தர குடும்பத்தில் கணவர் மற்றும் மகளுடன் பூமியில் வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் ஆல்பா யூனிவர்ஸ் எனும் மற்றொரு பிரபஞ்சத்தில் இருந்து பூமிக்கு வரும் கதையின் நாயகன், பூமியில் உள்ள கதாநாயகியிடம் ஒரு முக்கியமான விஷயத்தை கூறுகிறார்.

இதன்பின் கதாநாயகி மிச்செல் என்ன செய்கிறார், வேறு ஒரு பிரபஞ்சத்தில் இருந்து வந்து உலகை அழிக்க நினைக்கும் தனது மகளின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தினாரா இல்லையா என்பதை அற்புதமான திரைக்கதை உடன் படத்தில் கூறியுள்ளனர். Multiverse Concept-ல் முதல்முறை வித்தியாசமாக எடுக்கப்பட்ட திரைப்படமாக இது இருப்பதாக சினிமா ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.
படத்தின் கதை கேட்க சாதாரணமாக இருந்தாலும், இயக்குனர்கள் டேனியல் குவான் மற்றும் டேனியல் ஸ்கீனெர்ட் கதையை திரைக்கதையாக்கிய விதமும், Multiverse Concept-ஐ அவர்கள் விளக்கிய விதமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுவே இப்படம் ஆஸ்கரில் 7 விருதுகளை வென்று குவித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இத்திரைப்படம் இப்போது ஓடிடி தளத்தில் பலராலும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க இந்த திரைப்படத்திற்கு 7 விருதுகள் என்பது அதிகப்படியானது எனும் எதிர்மறை விமர்சனங்களும் பெரும்பாலாக சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. நீங்க இந்த படத்த பார்த்திருந்தா படம் பத்தின உங்க கருத்துக்கள கமெண்ட்ல சொல்லுங்க…