Cinema News Specials Stories

மொபைல் GB மூலம் சிரிப்பு தரும் GP

பொதுவா எல்லாருக்கும் புடிச்சது “ஜி’லே’பி” எப்பவுமே ‘லே’ போட்டு பேசுறதுல பேமஸ் நம்ம “ஜிபி”.

லாக்டவுனில் ஊரே முடங்கி கிடக்கும் பொழுது சிப்பிக்குள் வரும் முத்து போல ஜிபி முத்து தன்னுடைய இயல்பான பேச்சாலும் வெகுளித்தனத்தாலும் மக்களை ஈர்த்தார். ரசிக்க வைத்தார். சிரிக்க வைத்தார்.

மோதலில் இருந்து காதல் வளர்வது போல ரசிகர்களுக்கும் ஜி.பி முத்துவிற்கும் இடையே முதலில் மோதலும், பெரும்பாலும் எதிர் கருத்துக்களுமே வந்து கொண்டிருந்த பட்சத்தில்… அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர் பேசிய வார்த்தைகள், திட்டித் தீர்த்த சொற்கள் அனைத்தும் காமெடியான பேச்சுகளாக மாறியதால் மக்கள் அவரை ரசிக்கத் தொடங்கினர்.

தன்னுடைய மனதை புரிந்து கொள்ளாமல் எதிரியாக இருந்தவர்களை தன்னுடைய வெகுளித்தனமான பேச்சின் வழி சொந்தங்களாக மாற்றியுள்ளார். பொதுவாக இக்னோர் நெகட்டிவிட்டி அப்படின்னு சொல்லுவாங்க… ஆனா, இவருக்கு வந்த கடிதங்கள், அதுல இருந்த நெகட்டிவ் வார்த்தைகள், அதுக்கு இவர் கொடுத்த பதில்கள்… இதெல்லாம் அவருடைய வாழ்க்கைல நிறைய Positive-ஆன மாற்றங்கள உண்டாக்கி இருக்கு.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் அப்படிங்கிற மாதிரி அவரோட குடும்பத்துக்காக சின்ன வயசுலயே, அப்பா கடையில சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பிச்சாரு. கொஞ்ச நாள் நல்லா போனாலும் திடீர்னு ஒரு பெரிய நஷ்டம்… கடைய விட்டு வெளிய வந்து சுயமா ஒரு தச்சர் ஆனாரு.

லாக்டவுன் பல பேரோட வாழ்க்கைய திருப்பி போட்டுச்சு, அதுல இவரும் ஒருத்தர். நேரம் கிடைக்கும்போது கேளிக்கை வீடியோ செய்ய ஆரம்பிச்சு சில நாட்கள்லயே எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சாரு. நாட்டின் ஒரு சில சூழ்நிலையால் சில சமூகவலைதள செயலிகளுக்கு இந்தியால தடை விதிச்சாங்க.

அதுல இவரு பிரபலமாக உதவியா இருந்த டிக்டாக் செயலியும் ஒன்னு. அப்போதான் ஜிபி முத்து பிரபலமாகிட்டு இருந்த சமயம். டிக்டாக் செயலிக்கு தடை விதிச்சது இவருக்கு ஒரு பெரிய பின்னடைவா இருந்தாலும் அதிர்ஷ்டம் ஒரு கதவ மூடுனா இன்னொரு கதவ திறக்கும்ன்னு சொல்வாங்க.

டிக்டாக்ல மூடின கதவு, இன்ஸ்டாகிராம், Youtube வழியா திறந்துச்சு. அதுல இவருடைய கேளிக்கை பேச்சும், குறிப்பா கடிதம் படிக்குற விதமும் வெகுளித்தனமும் மக்கள பொழுதுபோக்கின் உச்சத்துக்கே கூட்டிட்டு போச்சுனு சொல்லலாம். உலகம் முழுக்க பிரபலமானார் ஜிபி முத்து. லாக்டவுன் சமயத்துல அவர் வீடியோ பாத்து சிரிக்காதவங்களே யாரும் இருக்க முடியாது.

ஒரு பக்கம் இப்படி இருந்தாலும், மறுபக்கம் இவர் இரட்டை அர்த்தமா பேசுறாரு. இவரோட வீடியோக்கள் நிறைய 18+ Content-ஆ இருக்கு அப்டினும் சொன்னாங்க. இருந்தாலும் தொடர்ச்சியான இவருடைய வீடியோக்கள்ல அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணி இன்னும் நிறைய மக்கள்கிட்ட போய் சேர்ந்தாரு.

ரொம்ப பிரபலமாகிட்டாலே சினிமா கதவு தானா திறக்கும். அப்படி இவருக்கும் திரைப்பட வாய்ப்பு கிடைச்சது. இன்னிக்கு சினிமா, தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் இவருடைய கால்ஷீட்டுக்காக காத்துட்டு இருக்கு. குடும்ப வருமான பிரச்னைகள் எல்லாத்தையும் சரி செஞ்சு நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்காரு.

சமூக வலைத்தளம் மூலமா பல இளைஞர்கள் தவறான வழில போனாலும், சமூக வலைத்தளத்த எப்படி நமக்கேத்த மாதிரி பயன்படுத்தி வாழ்க்கைல முன்னேறி செல்லலாம்-ங்கிறதுக்கு ஜிபி முத்து ஒரு பெரிய எடுத்துக்காட்டு. ஜிபி முத்து இதைத் தாண்டி இன்னும் அதிகமா சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறது சூரியன் FM.

Article By Henry Enock

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.