நகைச்சுவை நடிகர்கள் வெறுமனே சிரிக்க வைப்பார்கள் என்று நினைத்த காலத்தில் சிரிப்போடு சிந்தனையும் கலந்து தந்து மக்களால் கலைவாணர் என்கிற பட்டத்தோடு அன்போடு அழைக்கப்பட்டவர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள்.
அவருக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நகைச்சுவை என்றாலே கிண்டல் நையாண்டி என்பது மாத்திரமே இருந்த காலத்தில் சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவையை கொடுத்து மக்கள் மனங்களில் சின்னக் கலைவாணர் என்ற பட்டம் பெற்று கொண்டாடப்பட்டவர் நடிகர் விவேக் அவர்கள்.

ஒரு காலத்தில் திரைப்படங்கள் கதாநாயகன், நாயகிகளுக்காகவும் சில திரைப்படங்கள் இயக்குனருக்காகவும் இன்னும் சில திரைப்படங்கள் கதை களத்துக்காகவும் திரைக்கதைக்காகவும் வெற்றியடைந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சின்னக் கலைவாணரின் நகைச்சுவைக்காகவே திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் ஏராளம் வந்தது என்றால் அதற்கு காரணம் விவேக் செய்த சிந்தனையை தூண்டும் நகைச்சுவைகள் தான்.
குறிப்பாக கண்டேன் சீதையை மற்றும் சீனு ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி அடைந்ததில் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றே சொல்லலாம். ஒரு திரைப்படத்தில் காமெடி மூலம் மக்களை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் அதை மிக இலகுவாக அடுத்தவர் மனம் புண்படாத மாதிரியான நகைச்சுவைகளை செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததனால் இவரது கலை சேவையை பாராட்டும் விதத்தில் விவேக் அவர்களுக்கு இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

ஒருபுறம் நகைச்சுவை நடிகராக மக்களை சிரிக்கவும் வைத்து சமூகத்தின் மீதான தன்னுடைய அக்கறையை தன்னுடைய சிந்தனைகள் மூலமாக மக்கள் மனதில் விதைக்கவும் செய்த நடிகர் விவேக் அவர்கள், இன்னொரு பக்கம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் சீடனாய் தன்னால் முடிந்த வரை அவருடைய கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை பேட்டி எடுத்த ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையும் சின்னக் கலைவாணரை சாரும்… “கிரீன் கலாம்” என்கிற பெயரில் கிட்டத்தட்ட 33 லட்சம் மரங்களை நட்டு வைத்தவர் விவேக் அவர்கள். இந்திய நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் உள்ளது என்பதை முழுதும் உணர்ந்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சென்று கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிக்குமாறும் வலியுறுத்தி இருக்கிறார்.

இப்படி அவர் விதைத்த நல்ல சிந்தனைகள் மூலமாகவும் நட்டு வைத்த மரங்கள் மூலமாகவும் இம்மண்ணிலிருந்து மறைந்த பின்னும் நம் நினைவுகளில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் பிறந்த நாளில் சூரியன் FM அவரை நினைவு கூர்கிறது.