Ilayaraja – இந்திய இசையின் மேதை இளையராஜா இசையின் மீதான தனது ஆர்வத்தின் மூலம் அசாதாரணமான முறையில் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். பாடல் வரிகள் மற்றும் இசையமைப்புகள் மூலம் மொழியைப் புரிந்துகொள்ளும் அவரது பயணம், இசையைத் தாண்டி அவரது திறமையைக் காட்டுகிறது.
மேற்கத்திய இசை கற்ற தனது அனுபவத்தை ராஜா சார் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். “தன்ராஜ் மாஸ்டர்கிட்ட முதன் முதலில் வெஸ்டர்ன் கற்றுக்கொள்வதற்காக சென்றேன். ரொம்ப பெரிய ஆள், சந்திரலேகா படமெல்லாம் அவரோட வொர்க் தான். ஒரு பெரிய சுருட்டுடன் தான் கம்பீரமாக இருப்பார். என்னை பார்த்தவுடன் ‘7’ வடிவில் ஏழு வெஸ்டர்ன் நோட்ஸையும் எழுதி இவ்வளவு தான் வெஸ்டர்ன் என்றார். பிறகு இதுதான் “A” என பியானோவில் “A” நோட்ஸை வாசித்த போது எனக்குள் சொல்ல முடியாத உணர்வு.
இதுதான் “A” வா? என்று ஆச்சர்யம் ஏனென்றால் எனது ஆர்மோனியத்தில் எப்போதும் நான் வாசிக்கும் ஒன்றுதான் அது. அந்த ஒலி நான் எப்போதும் கேட்பதுதான். ஆனால் அதுதான் “A” என்று அப்போதுதான் தெரியும். பிரசவம் முடிந்த பிறகு எப்படி பிள்ளை பெற்றுக்கொள்வது என்று தெரிந்து கொள்வது போல இருந்தது அது” என்று சிரித்தார்.
“பிரசவம் முடிந்த பிறகு எப்படி பிள்ளை பெற்றுக்கொள்வது என்று தெரிந்து கொள்வது போல இருந்தது அது” எவ்வளவு அருமையான ஒப்பீடு!. அவரது பால்ய காலம் முழுக்க வாசித்த இசை துணுக்குகள், அவரையும் அறியாமல் கற்றுகொண்ட ஒலிக்கோர்வைகளுக்கெல்லாம் என்னென்ன பெயர் என்பதை தான் பின்னாளில் கற்றுகொள்கிறாரே தவிர அந்த இசையையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் அதற்கு முன்பாகவே அவர் அறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட சிம்பொனியிலும் அதுதான் நடந்திருக்கிறது. அதை பிறகு பார்ப்போம்.

இசைஞானி தொடர்ந்தார் “நான் சினிமா ரெக்கார்டிங்கில் நீண்ட நேரம் செலவிட்ட காரணத்தால், தன்ராஜ் மாஸ்டர் கிளாஸ்க்கு ரெகுலராக போக முடியாது. எக்ஸாம் வேற எழுதாமயே இருந்தது. ஒரு நாள் மாஸ்டர் என்னை கூப்பிட்டு “இனி நான் உனக்கு கிளாஸ் எடுக்க போறதில்லை, கெட் லாஸ்ட்” என கோபமாக திட்டினார். சார் இனி நான் ரெகுலராக வருகிறேன் என எவ்வளவோ சொல்லி பார்த்தும் அவர் பிடிவாதமாக “ஐயாம் நாட் கோயிங் டு டீச் யூ” என உறுதியாக சொல்லிவிட்டார். நானும் சும்மா இல்லாம கொஞ்சம் கோபமாக, இந்த எக்ஸாம பாஸ் பண்ணிட்டு வந்து உங்கள பார்க்கிறேன்” என சபதம் பண்ணிவிட்டு வந்தேன்.
கிராமம் முழுக்க ஆர்மோனியம் சுமந்து இசையை கற்றுக்கொண்ட மேதை மேற்கத்திய இசைக்கான தேர்வை தன்னிச்சையாக எழுதப்போவதாக சபதமிட்டு வந்திருக்கிறார். அப்படி சபதமிட்டு வந்தவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி தேர்வுக்கான பாடங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது, ஆங்கிலத்தில் அவ்வளவு பரிச்சியம் இல்லாத ஒருவர் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது ஒரு சவாலாகத்தான் இருந்திருக்கிறது.
“ஆங்கிலத்தை பார்த்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால், எனக்கு இசை தெரியுமல்லவா அதன் வழியாக இதுதான் சொல்லியிருப்பார்கள் என ஆங்கிலத்தை புரிந்து கொண்டேன், உதாரணத்திற்கு ரிலேட்டிவ் சி மைனர் என்று வைத்துக்கொள்வோம், சி மைனருக்கு தொடர்பான ஒலிகள் எங்கெங்கு இருக்கும் என எனக்கு தெரியுமென்பதால் ஆங்கிலத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும். அப்படித்தான் எனக்கு தெரிந்த இசையின் வழியாக ஆங்கிலம் கற்றுக்கொண்டேன், தேர்வும் எழுதினேன்.
இறுதியாக 85 சதவீத மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் ஹானர்ஸ் வாங்கி தேர்ச்சியடைந்தேன். அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு நேராக மாஸ்டரிடன் சென்றேன். சுருட்டு புகைத்துக்கொண்டு ஒரு சோபாவில் அமர்ந்திருந்தவரிடம் பேப்பரை நீட்டி, சார் பாஸ் பண்ணிவிட்டேன் என்றேன். கொஞ்ச நேரம் அந்த பேப்பரை புரட்டி பார்த்துவிட்டு ‘ராஜா நீ சாதிச்சிட்டடா” என்றார்” இதை சொல்லி முடிக்கும்போது இசைஞானியின் முகம் பெருமிதத்தில் ஒரு குழந்தையை போல மாறியிருந்தது. ஒரு குழந்தையை போல தனது முதல் சாதனையை பகிர்ந்து கொண்ட அவரை பார்க்கும்போது எங்களுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.
Source: Sivabalan Elangovan (https://www.facebook.com/share/p/1ABFsdssKA/)