Cinema News Stories

கருணாஸ் எனும் பன்முகக் கலைஞன்

Karunas Family

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி நகரில் குருவி கரம்பை கிராமத்தில் பிப்ரவரி 21, 1970 இல் கருணாநிதி சேதுவாக பிறந்த கருணாஸ், தனது பள்ளிப் படிப்பை பழங்குடி பாரதி பள்ளியில் முடித்து, பின்னர் நந்தனம் கலை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார்.

கருணாஸ் தனது 12 வது வயதில் கானா பாடகராக பணிபுரிந்து கானா கருணாஸ் என்ற பெயரை பெற்றார். பின்னர் அவர் 1990-களின் பிற்பகுதியில் யூகி சேதுவின் நையாண்டி தர்பார் மூலம் ஒரு இசைக் கலைஞராக தொலைக்காட்சியில் அறிமுகமானார்.அவர் ஒரு பாப் பாடகர் மற்றும் நடனக் கலைஞர் மற்றும் தமிழ் நாட்டுப்புற இசையிலும் விரிவாக பணியாற்றினார்.

பின்னர் படிப்படியாக நகைச்சுவை நடிகராக படங்களில் நடிக்கத் தொடங்கினார். இன்று வரை பல்வேறு வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களை பெற்றவர். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்கள் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். நடிகர் கருணாஸ் நல்ல நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு பாடகரும் கூட. நிறைய படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார்.

காமெடியனாக மட்டுமல்ல குணச்சித்திர நடிகராகவும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். திருடா திருடி படத்தில் இவன் சின்ன விவேகானந்தா இல்ல சின்ன பிரேமானந்தா, அஜித் திரைப்படத்தில் கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் ஜீவா அப்படிங்கிற காமெடி, அதைத்தொடர்ந்து நந்தா திரைப்படத்தில் இவர் நடித்த லொடுக்கு பாண்டி கேரக்டர் இன்றளவும் மக்களிடையே பேசப்படுகிறது.

தகப்பன் சுவாமி திரைப்படத்தில், ”ஏன் கோவிந்தா டீ ரொம்ப சூடா இருக்குல்ல கோவிந்தா” அப்படிங்கிற காமெடி இன்னைக்கு வர மீம்ஸ்லயும் வலம் வருது அப்படின்னு சொல்லலாம். முக்கியமா சூர்யாவின் சூரரைப் போற்று, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, கார்த்தி நடிப்பில் விருமன், விஷாலின் கதகளி, சூர்யாவின் அயன் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி இருப்பார்.

2013-ல் வெளிவந்த சந்தமாமா மற்றும் ரகளைபுரம் இந்த திரைப்படங்களின் இசையமைப்பாளர் மற்றும் பாடகரும் ஆவார். இவர் 2009-ல் வெளிவந்த ராஜாதி ராஜா 2010-ல் வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய தமிழ் திரைப்படங்களின் ஒளிப்பதிவுகளுக்கு இசையமைத்துள்ளார். நடிகர் கருணாஸ் ஒரு நடிகர் மட்டுமல்ல, அரசியல்வாதியும் ஆவார்.

கருணாஸின் மகன் கென் கருணாஸ் தனுஷின் அசுரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். வாத்தி திரைப்படத்திலும் நடித்திருந்தார் கருணாஸ் மகன் கென். அதற்கு பிறகு அவர் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். கருணாஸின் மனைவியும் தமிழ் சினிமாவின் முக்கிய பின்னணிப் பாடகி. இப்படி குடும்பமே கலைக் குடும்பமாக தமிழ் திரையுலகில் பயணித்து வருகின்றனர்.

சிறந்த பன்முகக் கலைஞர் கருணாஸுக்கு சூரியன் FM-ன் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Article By RJ Jebaraj