சமூக ஊடகங்களின் மூலம் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விளைவுகள் குறித்து சமூக ஊடக நிறுவனங்கள் எந்தளவு அறிந்துள்ளன?!, டிஜிட்டல் தளங்கள் தனிநபரின் வாழ்வில் ஏற்படுத்தும் சேதங்களுக்கு அந்நிறுவனங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுமா?!, அவ்வாறு ஏற்படுத்தும் சேதங்களை கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை சமூக ஊடக நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன?! போன்ற சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க டிக்டாக், எக்ஸ், மெட்டா, ஸ்னாப் சாட் போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் சிஇஓக்கள் கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்க செனட் நீதித்துறை குழு முன் சாட்சியம் அளித்தனர்.
அமெரிக்க குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி சார்ந்த செனட் சபை உறுப்பினர்கள், சமூக ஊடக நிறுவனங்களின் CEO-க்களிடம் அடுக்கடுக்காக ஏராளமான கேள்விகளை கேட்டனர். விசாரணையில், சமூக ஊடகங்களின் மூலம் அடிமையாக்கும் தன்மை, கட்டுப்பாடற்ற பாலியல் வேட்டையகள், பாலியல் சீண்டல்கள், மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் உண்மையற்ற அழகுத் தரங்களை மேம்படுத்துதல், வேறுபாடுகளை பரப்புதல் ஆகியவற்றால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் மற்றும் பாதிக்கப்படுகிறார்கள், டிஜிட்டல் தளங்களின் மூலம் உணவுக் கோளாறுகள் மற்றும் தற்கொலை வழக்குகள் அதிகரித்துள்ளது போன்றவைகளுக்கான விளக்கங்கள் கேட்கப்பட்டன.
முக்கியமாக குழந்தைகளின் சமூக ஊடக அடிமைத்தனத்தை பற்றி பெற்றோர்களின் வருத்தங்களும் சபையில் பதிவு செய்யப்பட்டது. சமூக ஊடகங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சில வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டது, தற்கொலை மரணத்தால் இழந்த குழந்தைகளின் படங்கள் மற்றும் பதாகைகளோடு சில பெற்றோர்கள் சபைக்கு வந்திருந்தனர்.
பல மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வில் “எங்கள் குழந்தைகள் ஆன்லைனில் எதிர்கொள்ளும் பல ஆபத்துகளுக்கு நிறுவனங்களே பொறுப்பு” என்று நீதித்துறைக் குழுவின் ஜனநாயகக் கட்சியின் தலைவரான செனட்டர் டிக் டர்பின் கூறினார். குடியரசுக் கட்சியின் மிசோரி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி, மெட்டா CEO ஜுக்கர்பெர்க்கிடம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் இழப்பீடு வழங்கியிருக்கிறாரா என்று கேட்டார். “நான் அப்படி நினைக்கவில்லை,” என்று ஜுக்கர்பெர்க் பதிலளித்தார்.
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இங்கே உள்ளன,” . “நீங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா?” என்று ஹவ்லி மீண்டும் ஜுக்கர்பெர்க்கிடம் கேட்டார். ஜுக்கர்பெர்க் சற்று தயங்கி கேலரியில் இருந்த பெற்றோரை நோக்கி “நீங்கள் அனைவரும் அனுபவித்த அனைத்திற்கும் நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட விஷயங்களை யாரும் கடந்து செல்லக்கூடாது, ”என்று அவர் கூறினார்.
குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தொழில்துறை அளவிலான முயற்சிகளில் மெட்டா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது என்று விளக்கமளித்தார். தனியுரிமை மற்றும் பயனர் தரவு தொடர்பான கவலைகளுக்காக ஜுக்கர்பெர்க் பலமுறை மன்னிப்புக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
அமெரிக்க செனட் நீதித்துறை உறுப்பினர்கள் சமூக ஊடக CEO-க்களிடம் “உங்கள் தயாரிப்புகள் மக்களைக் கொல்கிறது,” என்று ஆக்ரோஷமாக விமர்சித்தினர். NCRI எனப்படும் இலாப நோக்கற்ற நெட்வொர்க் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில், தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களால் துஷ்பிரயோகம் வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.