Cinema News Specials Stories

கானாவை கடந்து தேவா!

பெரும்பாலும் தேவா என்றால் கானா பாடல்கள் தான் பலருக்கும் தெரியும். தமிழ் திரையுலகில் கானா பாடல்களுக்கான விதை இசையமைப்பாளர் தேவா போட்டது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதிலும் குறிப்பாக தேவா குரலில் உருவான கானா பாடல்கள் உடனே நினைவுக்கு வந்துவிடும். பின் ஏன் அவர் தேனிசை தென்றல் என அழைக்கப்படுகிறார் தெரியுமா?

ஊர்ப்புறங்களில் பேருந்தில் பயணிக்கும் போது நிச்சயம் நீங்கள் இந்த பாடல்களை ஒருமுறையாவது கேட்டிருப்பீர்கள். ஆடியில சேதி சொல்லி நாத்து ஒன்னு நட்டு வச்சு, பதினெட்டு வயது இளமொட்டு, என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு, செம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே, தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியது, உயிரே உயிரே அழைத்ததென்ன, மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே, வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே இந்த பாடல்களை கேட்டிருக்கிறீர்கள் தானே!

Image

ஆமாம் என்பது தான் உங்கள் பதிலாக இருக்கும். அதுதான் தேவாவின் வெற்றி. கானாவை விட தேவாவின் காதல் பாடல்கள் சிறப்பானதாக இருக்கும். தென்றல் போல மனதை வருடுவதாய் இருக்கும். பேருந்தில் பயணிக்கும் போது ஜன்னல் வழி வந்து வருடும் தென்றல் போல, இவரது பாடல்களும் ஊர்ப்புற பேருந்துப் பயணங்களில் தேனிசையாய் வந்து நம்மை தென்றல் வருடிச் செல்லும். பெருந்து பயணத்தை தாண்டி எப்போது கேட்டாலும் அந்த உணர்வு நமக்கு கிடைக்கும். அதனால் தான் அவர் தேனிசை தென்றல் என அழைக்கப்படுகிறார்.

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா திரைப்படம் இன்றும் டிவியில் போட்டால் பலரது வீட்டிலும் ஓடிக் கொண்டிருக்கும். படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். ரஜினிகாந்த் என்றாலே இன்றும் நமக்கு பாட்ஷா மாணிக் பாட்ஷா என்ற வசனமும் பின்னணி இசையும் தான் நியாபகம் வரும். அந்த இசைக்கு சொந்தக்காரர் தேவா.

Music composer Deva: the monarch of Gaana music - The Hindu

இதுமட்டுமின்றி ஒவ்வொரு படத்திலும் ஓபனிங் சாங் கொடுப்பதில் தேவா கில்லாடி. அது கதாநாயகனுக்காக இருந்தாலும் சரி, கதாநாயகிக்காக இருந்தாலும் சரி. வந்தேன்டா பால்காரன், நான் ஆட்டோ காரன், புல்வெளி புல்வெளி, மேகம் கருக்குது உள்ளிட்ட பாடல்கள் அதற்கு உதாரணம். தேவா இப்படித்தான் என எளிதில் கூறி விட முடியாது. கானா, காதல், ஓபனிங், காதல் தோல்வி, நட்புக்கான பாடல்கள் இதுமட்டுமின்றி கிராமப்புற பாடல்கள், வெஸ்டர்ன் பாடல்கள் என ஆல் ஏரியாவிலும் அசால்ட்டாக ஆடிப் பார்ப்பவர். என் ஆசை மச்சான், எட்டுப்பட்டி ராசா, பாஞ்சாலங்குறிச்சி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட படங்கள் தேவாவின் கிராமத்து இசைக்கான சாட்சியங்கள்.

காதல் கோட்டை திரைப்படம் வெளியான பிறகு இன்று வரை… ஏன்… இனி வரும் நாட்களிலும் கூட ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று தமிழ் தொலைக்காட்சிகளில் காதல் கோட்டை படத்தில் தேவாவின் இசையில் உருவான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ பாடல் நிச்சயம் ஒலிக்காமல் இருக்காது. காதல் கோட்டை படத்தில் இது மட்டுமல்ல அத்தனை பாடல்களும் ஹிட். காதலிக்க… நலம் நலமறிய ஆவல், காதல் தோல்விக்கு… கவலைப்படாதே சகோதரா, இதைத்தாண்டி வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, மொட்டு மொட்டு மலராத மொட்டு, சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது உள்ளிட்ட அத்தனை பாடல்களையும் ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. காதல் கோட்டை படத்திற்கு பிறகு தான் தேவாவின் இசை அடுத்த கட்ட பரிணாமத்தை அடைந்தது.

Image

90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் இவருக்கென ஒரு தனி இடம் உண்டு. 90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 80ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என அனைவரும் ரசிக்கும் வகையில் தேவாவின் இசை இருக்கும். சந்தேகமா… இப்போது தேவாவின் இசையில் உருவான மேலும் சில பாடல்களை சொல்கிறேன், கேளுங்கள்.

ஆசை படத்தில் கொஞ்ச நாள் பொறு தலைவா, மீனம்மா பாடல்கள், அவ்வை சண்முகி படத்தில் வரும் காதலா காதலா காதலால் தவிக்கிறேன் பாடல், நேருக்கு நேர் திரைப்படத்தில் அவள் வருவாளா, மனம் விரும்புதே உன்னை, எங்கெங்கே பாடல்கள், 1997ல் வெளிவந்த ஆஹா எனும் திரைப்படத்தில் முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது பாடல், நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் வண்ணநிலவே, என்னவளே என்னவளே பாடல்கள், ப்ரியமுடன் படத்தில் பூஜா வா, பாரதிக்கு கண்ணம்மா பாடல்கள், வாலி திரைப்படத்தில் ஓ சோனா, ஏப்ரல் மாதத்தில் பாடல்கள், மின்சாரக் கண்ணா திரைப்படத்தில் ஊதா ஊதா ஊதாப்பூ பாடல், முகவரி திரைப்படத்தில் கீச்சு கிளியே பாடல், குஷி திரைப்படத்தில் மொட்டு ஒன்று பாடல், பகவதி திரைப்படத்தில் ஜூலை மலர்களே பாடல் என இன்னும் நிறைய காதல் பாடல்கள் இவரது இசையில் நம் மனதில் நிறைந்திருக்கிறது.

Image

அட இந்த பாடல்களெல்லாம் தேவாவின் இசையில் உருவானதா என்று கூட சிலருக்கு தோன்றியிருக்கலாம். இப்படி நம்மையும் அறியாமல் நம்மால் ரசிக்கப்பட்டிருப்பார் தேவா. விஜய், அஜித் இருவரின் ஆரம்பகட்ட ஹிட் படங்களிலிருந்து குஷி, வாலி வரை நிறைய படங்களின் வெற்றிக்கு இசை வழியான இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக வலம் வந்த காலத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேனிசை தென்றல் தேவா. இளையராஜா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்… புதிதாக 27 இசையமைப்பாளர்கள் வந்து காணாமல் போய்விட்டனர், 28 வதாக தேவா வந்திருக்கிறார் என பத்திரிகை செய்திகள் வெளியானது.

அப்படிப்பட்ட சூழலிலும் தனித்துவமான தனது இசையால் மக்கள் மனதை மயக்கி தமிழ் சினிமாவில் அவருக்கான இடத்திற்கு அஸ்திவாரம் போட்டார் தேனிசை தென்றல் தேவா. அடுத்த சில வருடங்களில் இசைப்புயல் தமிழ் சினிமாவை ஆட்கொண்டது. இசைஞானி மற்றும் இசைப்புயல் ஆகிய இருபெரும் இசை ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவை தன் வசம் வைத்திருந்த காலகட்டத்திலும் தன்னை நிரூபித்துக் காட்டியவர் தேவா.

Image

அடுத்தடுத்த தலைமுறைகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இருவரது இசைக்கும் தனித்தனி ரசிகர்கள் ஒரு கட்டத்தில் உருவான சமயத்தில், தேவாவின் இசை அனைத்து ரசிகர்களையும் சென்று சேரக் கூடியதாக இருந்தது. இப்படியாக தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. காரணம் அவருடைய கானா பாடல்களின் வழியே கடைக்கோடி தமிழர்கள் வரை அவர் சென்று சேர்ந்திருக்கிறார்.

இப்படியாக பல பரிணாமங்களில் பயணித்த இசையமைப்பாளர் தேவா ஒரு கட்டத்தில் ஓய்வெடுக்கத் தொடங்கி விட்டாலும் அந்த இடத்தை தனது குரலின் வழி நிரப்பினார் பாடகர் தேவா. ஆரம்ப காலத்தில் தான் இசையமைத்த படங்களில் மட்டுமே பெரும்பாலும் பாடி வந்த தேவா, காலப்போக்கில் பிறரது இசையிலும் பாடினார். இன்று பல முன்னணி இளம் இசையமைப்பாளர்களின் இசையில் தொடர்ந்து பாடி வருகிறார். இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கு பல இடங்களில் முன்னோடியாகவும் இருக்கிறார். தேவாவின் குரலில் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கும் சில பாடல்களை தற்போது பார்ப்போம்.

Image

கவலைப்படாதே சகோதரா, ஊனம் ஊனம், விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி, மனிஷா மனிஷா, ஒயிட்டு லகான் கோழி, மீசைக்கார நண்பா, சலோமியா உள்ளிட்ட பல பாடல்கள் தேவாவின் குரலில் நம்மை ஆட்கொண்ட தனித்துவமான பாடல்கள். நடுவில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்ட தேவா 2014 ஆம் ஆண்டு மான் கராத்தே திரைப்படத்தில் ராக் ஸ்டார் அனிருத் இசையில் ‘ஓபன் த டாஸ்மாக்கு’ என மீண்டும் தனது குரலில் நமக்கு விருந்தளிக்கத் தொடங்கினார். அடுத்தடுத்து தெறி படத்தில் ஜித்து ஜில்லாடி பாடல், மூக்குத்தி அம்மன் படத்தில் சாமி குலசாமி பாடல், கர்ணன் திரைப்படத்தில் மஞ்சநத்தி புராணம் பாடல் இப்படி பல பாடல்களை தொடர்ந்து பாடி வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்து சென்றாலும், இசையமைப்பாளர் தேவாவின் இடத்தை ஆக்கிரமிக்க முடியாது. தேவாவின் இசை தேனிசைத் தென்றலாக தமிழ் சினிமாவில் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும்.

Artilce By MaNo

About the author

MaNo